சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே திமுக அரசு ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சேதனை நடத்தி வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், "அதிமுகவை அழித்துவிட வேண்டும். அதிமுகவின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினருக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் லஞ்ச ஊழல் பேர்வழிகள் என்றொரு போலியான ஒரு மாயை அதாவது செயற்கையான ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முனைப்போடு காவல்துறையை ஏவிவிட்டு, இன்றைக்கு பழிவாங்குகின்ற செயலை திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.
பொங்கல் பரிசு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தார்களே தவிர, பொங்கல் பரிசு கொடுக்கவில்லை. தரமற்ற பொருள்களைத் தரவில்லை என்பதால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை திசை திருப்ப மக்களை அதனை மறக்கடிக்கச் செய்யும் வகையில், கோயபல்ஸ் பாணியில் ஆளும் திமுக அரசு கையாண்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிமுகவின் புகழுக்கும், நற்பெயருக்கும் எந்தவொரு கொம்பனாலும் களங்கம் ஏற்படுத்திவிட முடியாது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தபின் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார். அதன்படி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றக் கொண்டபின், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்: அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவருக்குச் சொந்தமான இடங்களில்தான் திமுக ஆட்சிக்கு வந்தபின் முதல் சோதனை நடத்தப்பட்டது. கரூர் மற்றும் சென்னையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், ரூ.25.56 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினா்.
எஸ்.பி.வேலுமணி: அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை இவரது நெருங்கிய உறவினர்களுக்குக் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 60 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் நில ஆவணங்கள், பல்வேறு பணப்பரிமாற்ற ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
கே.சி.வீரமணி: இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இவர் அமைச்சராக இருந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் ரூ.28.78 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.34.01 லட்சம் ரொக்கம், ரூ.1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் பிற சொத்து ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
சி.விஜயபாஸ்கர்: திமுக ஆட்சியில் 4-வதாக சோதனை மேற்கொள்ளப்பட்டது முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில்தான். 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.27.22 கோடி மதிப்பிலான சொத்துகளைக் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.விஜயபாஸ்கர் மனைவி மற்றும் அவரது மகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அன்னை தெரசா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் பேரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 14 கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
தங்கமணி: அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சார வாரியத்துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் முடிவில், ரூ.2.16 கோடி ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
கே.பி.அன்பழகன்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குச் சொந்தமான 57 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago