சென்னை: மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்ஜன.10 முதல் 18-ம் தேதி வரை நடந்த ‘தமிழிசை’ விழாவில் சொற்பொழிவு, கலைஞர்களின் வாய்ப்பாட்டு (குரலிசை) கச்சேரி, வாத்தியங்களின் இசை, நடனம் எனப் பல கலைகள் சங்கமமாயின.
நாகசுவர ஓசையில் நிறைந்த தேவன்
மங்கள இசைக்கென்று தனியாக கச்சேரி நடத்துவதற்கான வாய்ப்பை சபாக்கள் பெரும்பாலும் வழங்குவதில்லை. பாரதிய வித்யா பவனின் ‘தமிழிசை’ விழாவில் நடந்த எஸ்.ஆர்.ஜி.எஸ். மோகன்தாஸ் குழுவினரின் நாகசுவர இசை அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில் இருந்தது.
சுவாமி சரவணபவாநந்தர், நாட்டை ராகத்தில் எழுதியிருக்கும் `ஞானவினாயகனே’ பாடலோடு நாகசுவர நிகழ்ச்சி தொடங்கியது. `பரா பரா பரமேஸ்வரா’, `காண வேண்டாமோ’ஆகிய பாபநாசம் சிவனின் சாகித்யங்கள் நாகசுவரத்தின் வழியாக நாத வடிவில் ரசிகர்களின் காதில் தேன் பாய்ச்சியது. இசை முரசுதண்டபாணி தேசிகரின் `பிறவா வரம் தாரும்’,கோபால கிருஷ்ண பாரதியின் `எப்போ வருவாரோ?’ ரசிகர்களை பரவசப்படுத்தியது.
விஸ்தாரமான காபி ராக சஞ்சாரத்தைத் தொடர்ந்து `என்ன தவம் செய்தனை யசோதா’அரங்கில் இருந்தவர்களுக்கு கிடைத்த வரமாய் காற்றில் தவழ்ந்தது. தொடர்ந்து ஆனையம்பட்டி ஆதிசேஷையா எழுதி மதுரை சோமுவால் பாடிப் பிரபலமாகிய `என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை’ அரங்கில் இருந்தவர்களை உருக்கிவிட்டது. தேவாரம் பாடலோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் மோகன்தாஸ்.
11 வகை கூத்து
சீர்மிகு சட்டக் கல்லூரியில் ஹானர்ஸ் படித்திருக்கும் குயில் மொழி, தஞ்சை நால்வர் மரபுவழி பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருப்பது நர்த்தகி நடராஜிடம். குயில் மொழியின் நாட்டியத்தில் இயற்கையைப் பற்றிய வர்ணனைகளும், மொழி உணர்வும், பெண்ணியமும், காதலுமே முக்கியமான கருப்பொருள்களாக இருந்தன.
அகநானூறில் இடம்பெற்றிருக்கும் கபிலரின் `ஆடமைக்குயின்ற’ என்னும் பாடலில் குயில் கூவும் ஓசையும், யானையின் பிளிறலும், சலசலக்கும் ஓடை நீரின் ஓசையும் வாத்தியங்களின் இசையோடு ஒப்புமைப்படுத்தும் விதத்தில் இருப்பதை தன்னுடைய அபிநயங்களின் வழியாக அருமையாகப் புரிய வைத்தார் குயில்.
புராண காலம் தொட்டு ஆணின் விருப்பத்துக்காக பெண் என்பவள் அவளுடைய தனித்தன்மையை இழப்பவளாக, தோற்பவளாக, தன்னிலை இழப்பவளாக இருக்கிறாள் என்பதை சிவ-பார்வதி நடனம், துறவறம் போகும் மாதவி போன்ற பாத்திரங்களின் வழியாகச் சொல்லி, பெண்கள் அனைவரும் கொற்றவையின் இனம். அவர்கள் தங்களின் ஆற்றலை, தனித்தன்மையை இழக்கக் கூடாது என்னும் கருத்தை கொற்றவைத் தாய் சொல்வதாக பெண்களை ஆற்றுப்படுத்தும் வர்ணத்தை மிகவும் நேர்த்தியாக ஆடினார்
மாதவி ஆடிய 11 வகை கூத்து வடிவத்தை நடனத்தில் புகுத்திய குரு நர்த்தகியின் திறமையும், ஒவ்வொரு கூத்து முறையையும் ஆடிய குயில் மொழியின் திறமையும்ஒருங்கே பளிச்சிட்டன. தஞ்சை நால்வரின் படைப்பான கமாஸ் ராக தில்லானாவில் மகாகவி பாரதியின் `வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ வரிகளை இணைத்தது விவேகம்.
`கா வா வா’ வசுதா!
தீய சக்தியை அழிப்பதற்காக முருகனுக்குஅவனுடைய அன்னை பார்வதி ஞானவேலைகொடுத்த நாள் தைப்பூசம். அன்றைக்கு நடந்தகச்சேரி என்பதால் வசுதா ரவியின் கச்சேரியில் முருகனே பிரதானமாக வியாபித்திருந்தார். வசுதாவிடமிருந்து வெளிப்படும் எந்தவொரு சங்கதிகளையும் விடாமல் எதிரொலித்தது ஆர்.மாதவனின் வயலின். லயத்துக்கு என்.சி.பரத்வாஜின் மிருதங்கமும், டி.வி.வெங்கடசுப்பிரமணியத்தின் கடமும் சவுக்கியமாக அமைந்ததும் கச்சேரி சோபித்ததற்கான முக்கியமான காரணங்கள்.
பேராசிரியர் டி.ஆர்.சுப்பிரமணியத்தின் `செந்தில் வாழ் முருகய்யா’வை வர்ணத்துக்கு தேர்ந்தெடுத்ததிலேயே வசுதாவின் கச்சேரி விறுவிறுப்பான கச்சேரிக்கு கட்டியம்கூறியது. தொடர்ந்து நீலகண்டன் சிவனின்`ஓராரு முருகனே’, `தாயே திரிபுரசுந்தரி’ பாடல்கள் அரங்கத்தை பக்திப் பரவசப்படுத்தியது. பாபநாசம் சிவன், வராளி ராகத்தில் எழுதிய `கா வா வா’ பக்திக்கு சாட்சியாக விளங்கியது. இறுதியாக பாம்பன் சுவாமிகள் அருளிய ஷண்முக கவசத்தை விருத்தமாகப் பாடி, அருணகிரிநாதர் திருவண்ணாமலை தலத்தில் பாடிய `அமுதமூறு’ திருப்புகழைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் வசுதா ரவி. மனத்தில் நிறைந்த அந்த நிம்மதி, அடுத்து இன்னொரு நல்ல கச்சேரியைக் கேட்கும் வரை நிறைந்திருக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago