சென்னை: கர்நாடக அரசின் சதிக்கு இரையாகி மாநிலங்களிடையேயான நதிநீர் சிக்கல் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், பாசனம் சார்ந்த உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்கும் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தின் சில பிரிவுகள் தடையாக இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். மேகதாது அணைக்குக் கொல்லைப்புறமாக அனுமதி பெறுவதற்கான அவரது இந்த யோசனை கண்டிக்கத்தக்கது.
மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் காணொலியில் நடைபெற்ற பல்மாதிரி போக்குவரத்துக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘‘மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகத் தான் உள்ளது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறை அனுமதி ஆகியவற்றைப் பெறுவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. அதனால் திட்டச் செலவுகள் அதிகரிக்கின்றன. இத்தகைய அனுமதிகளைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தைத் திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதைச் செய்தாக வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கர்நாடக முதல்வரின் நோக்கம் பயனளிக்கக்கூடிய நீர்ப்பாசனத் திட்டங்களையோ, உட்கட்டமைப்புத் திட்டங்களையோ விரைவுபடுத்துவது அல்ல. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் லாபம் பார்ப்பதற்காக மேகதாது அணை கட்டும் திட்டத்தில் ஏதேனும் முன்னேற்றத்தை எட்ட வேண்டும்; அதைக் கொண்டு அங்குள்ள காவிரிப் பாசன மாவட்டங்களில் வாக்கு வங்கியை அறுவடை செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தத் துடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த நாடகத்தை நம்பி மத்திய அரசு ஒருபோதும் ஏமாந்துவிடக் கூடாது.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலேயே ஒரு மாநிலத்தில் உருவாகும் ஆறு அந்த மாநிலத்திற்கு மட்டும் சொந்தமாகி விடாது. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் மீது, அவை பாயும் அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கடைமடை மாநிலத்திற்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான் 1956-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. காவிரி உள்ளிட்ட மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகள் மீதான தமிழகத்தின் உரிமை ஓரளவாவது பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம்தான்.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது; வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் தமிழ்நாட்டைக் காவிரி ஆற்றின் வடிகாலாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் கர்நாடக அரசின் எண்ணம் ஆகும். அதன்படி இப்போது வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது. அவ்வாறு தமிழத்திற்கு வரும் உபரி நீரையும் தடுப்பதற்காக கர்நாடகம் உருவாக்கிய திட்டம்தான் ரூ.9,000 கோடியில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டும் திட்டம் ஆகும். மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுப்பதற்கு தமிழக அரசுக்குத் துணை நிற்பது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவைதான். தமிழகத்தின் இந்தப் பாதுகாப்பு அரண்களைத் தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் நதிநீர் சிக்கல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
அணைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தை முன்வைத்து 50 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனையின் பின்னணியை ஆராயாமல் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்டம் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் தமிழகத்தின் உரிமையைப் பறித்துள்ளது. அதேபோல், காவிரியிலும் தமிழகத்தின் உரிமையைப் பறிப்பதற்கான கர்நாடகத்தின் சதிதான் இந்தப் புதிய யோசனை ஆகும். அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் கூட, கர்நாடக முதல்வரின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பும், வேதனையும் அளிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் யோசனையின் பின்னணியில் உள்ள தீய நோக்கங்களை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். 1956-ம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டத்தை மத்திய அரசு வலுவிழக்கச் செய்துவிடக் கூடாது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago