'இது சமூக அநீதி... மக்களைத் திரட்டி போராட்டம்' - என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் ராமதாஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: 'நெய்வேலியில் என்எல்சி-க்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி இனி பலிக்காது, நிலம் வழங்கும் நபர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் தர வேண்டும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் எதிர்பார்ப்புகளை சிறிதும் நிறைவேற்றாத அத்திட்டம், தொடக்க நிலையிலேயே கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.

நெய்வேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலி மூலம் புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை வெளியிட்டார். அதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரகப்பகுதியில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப்பகுதிகளில் ரூ.75,000 வழங்கப்படும். மறுகுடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில் 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும். நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது; ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் என்எல்சி அறிவித்திருக்கிறது.

ஆனால், இதை ஏற்க மறுத்து விட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், பாமக நிர்வாகிகள் தலைமையில் அதற்கான நிகழ்ச்சியின்போதே எதிர்ப்பு முழக்கம் எழுப்பியுள்ளனர்; சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். ஆனால், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத என்எல்சி நிர்வாகமும், தமிழக அமைச்சர்களும் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு மாற்றுப் பாதையில் வெளியேறி விட்டனர். இது கண்டிக்கத்தக்கதாகும். என்எல்சி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதைந்து கிடக்கும் பூமியாகும். இந்த நிலங்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு என்எல்சி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுக்கக் கூடியவை. அத்தகைய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அடிமாட்டு விலையாகும்.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை.நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்கள் அவை. இழப்பீடாக என்எல்சி வழங்க முன்வரும் தொகையை இரு ஆண்டுகளில் உழவர்கள் ஈட்டி விடுவர். இந்த நிலங்கள் ஏக்கருக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.23 லட்சம் மட்டும் வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல், வீட்டுமனைகள் சென்ட் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு நான்கில் ஒரு பங்கு முதல் எட்டில் ஒரு பங்கு வரை மட்டுமே தருவது மக்களைச் சுரண்டும் செயலாகும். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

மூன்றாவது சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களால் 26 கிராமங்களில் வாழும் 8,751 குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்விடத்தையும் இழப்பார்கள். அவர்கள் குடியேற ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாதவை. அங்கு வாழ்வாதாரமும் கிடைக்காது. அதனால், நிலத்திற்கு கிடைக்கும் இழப்பீட்டை ஒரு சில ஆண்டுகளில் செலவழித்து விட்டு வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள். நிலம் வழங்கும் மக்களின் வாழ்வாதாரம் நிலைத்திருக்க ஒரே வழி அவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் கால முறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர வேலை வழங்குவது தான். ஆனால், நிலம் வழங்குவோருக்கு வேலை வழங்க முடியாது என என்எல்சி கூறுவது சுயநலம், சுரண்டல் மட்டுமின்று துரோகமும் ஆகும்.1956ம் ஆண்டில் சில லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.53,488 கோடி. ஆண்டு வருமானம் ரூ.11,592 கோடி. இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியின் இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் 44 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய 37,256 ஏக்கர் நிலங்கள் தான்.

என்எல்சியில் இன்றைய நிலையில் 11,511 நிரந்தர பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் கூட நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 1977-89 காலத்தில், நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப் பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்று விட்டனர். 1989க்குப் பிறகு நிலம் கொடுத்தோரில் 3,500 பேருக்கு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒப்பந்த பணியாளர்களான 14,899 பேரில், இவர்களின் விகிதம் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு. மாறாக, நிலம் தராத பிற மாநில பணியாளர்களின் எண்ணிக்கை இவர்களை விட அதிகம். இது சமூக அநீதி.

இப்போதும் கூட புதிதாக கையகப்படுத்தப்படவுள்ள நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். அந்த நிலங்களில் சுரங்கம், மின் நிலையம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றைக்கூட நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க மாட்டோம்; பிற மாநிலத்தவருக்குத் தான் வழங்குவோம் என்ற என்எல்சியின் மனநிலை தமிழர்களுக்கு விரோதமானது. இந்த கொடிய மனநிலைக்கு தமிழக அரசும் துணை போகக் கூடாது.

நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; வீட்டுமனைகளுக்கு சென்ட்டுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். நிலம் வழங்கும் குடும்பங்களில் இருந்து குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். இவற்றை செய்யாமல் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கலாம் என்று என்எல்சி நிர்வாகம் நினைத்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சியும், மண்ணின் மைந்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி போராடுவதற்கும்
பாமக தயங்காது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்