செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஸ்டாலின் ஆய்வு: புதிய நூல்களை வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, புதிய நூல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மு.கருணாநிதி மேற்கொண்ட பெரும் முயற்சியால், உலகின் மூத்த மொழியாம், சொல் வளமும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழி 2004-ஆம் ஆண்டு, அக்டோபர் 12ஆம் நாள் ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற மு.கருணாநிதியின் கனவினை நிறைவேற்ற, மத்திய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செம்மொழிக்கான நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல்பழங்காலம் முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், தமிழ் மொழி ஆய்விலும், அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும், தனித் தன்மையையும், அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.

மு.கருணாநிதியால் 2007-ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவரான. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பிரதமரால் 12.1.2022 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டடம் தரைத்தளத்துடன் மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தரைத் தளத்தில் 45,000-க்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களைக் கொண்ட நூலகமும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம் என இரண்டு கருத்தரங்க அறைகளும் உள்ளன. முதல் தளத்தில் கல்விசார் பணியாளர்களுக்கான அறைகள், அலுவலகம், இயக்குநர், பதிவாளர் மற்றும் நிதி அலுவலர் ஆகியோருக்கான அறைகள் உள்ளன. இரண்டாம் தளத்தில் மின்நூலகம், காட்சி வழி கற்பித்தல் அரங்கு, வலையொளி அரங்கு முதலானவையும் உள்ளன. மூன்றாம் தளத்தில் வருகைதரு பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் விதமாக அமைக்கப்பட உள்ளது.

இத்தகைய சிறப்பான கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்காக இன்று (17.1.2022) பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய வளாகத்திற்கு வருகை புரிந்து, அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்டார். நூலகத்திலுள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார்.

மேலும், திருவள்ளுவர் அரங்கம் மற்றும் தொல்காப்பியர் அரங்கம், கல்விசார் பணியாளர்கள், நிர்வாகப் பிரிவு அலுவலகங்களைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, செம்மொழி நிறுவன ஆய்வுசார் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நிறுவன இயக்குநர் காட்சி வழி மூலம் நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார். அதில் இந்நிறுவனத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், தற்போது செய்து கொண்டிருக்கும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் தமிழக முதல்வர் இந்நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு, தெய்வச்சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி, ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு, Dravidian Comparative Grammar-II, A Historical Grammar of Tamil ஆகிய எட்டு புதிய நூல்களை தமிழக முதல்வர் வெளியிட, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். தமிழக முதல்வர் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட ஆலோசனைகளை வழங்கினார்.

தமிழாராய்ச்சி மற்றும் பதிப்புகள் தவிர இந்தக் கழகத்தின் பணிகளில் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களை அடையும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், செம்மொழியின் பெருமைகளை வெகுமக்கள் அறியச் செய்ய தக்க ஊடக வழிகள் மற்றும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இம்மையத்தின் பணிகளை அறியச் செய்ய பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் விர்சுவல் அகாடமி போன்ற மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், 2010 முதல் 2019 வரை மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு 22.01.2022 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் இ. சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்