அமைச்சர்கள் தொடங்கிவைத்த உற்சாக ஜல்லிக்கட்டு: ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் 700 காளைகள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் உற்சாகமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.

இந்நிலையில், பொங்கல் திருநாளையொட்டி காணும் பொங்கல் அன்று ஆண்டுதோறும் வன்னியன் விடுதி பெருமாள் கோயில் திடலில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதைச் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் கோயில்களையும், அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

இதில், சுமார் 700 காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீறிப் பாயும் காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை வன்னியன் விடுதி விழாக்குழுவினர், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE