எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட வேண்டும்: அதிமுகவினருக்கு ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை கட்சியினர் நினைவில்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின்105-வது பிறந்த நாளையொட்டி அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர் ஒருபோதும் தனக்கென வாழ்ந்ததில்லை. பாடுபட்டு சம்பாதித்த பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் எழுதிவைத்துவிட்டு மறைந்தார். அவருக்கு நிகரான கொடை வள்ளல் யாரும் இல்லை.

சுயநலமும், தீய சக்திகளும் அண்ணாவின் ஆட்சியை தங்களது பிடிக்குள் வைத்துக் கொண்டு நடத்திய அராஜகத்தை எதிர்த்து, துணிவுடன் போராடினார் எம்ஜிஆர். அதனால்தான், நம் உயிரினும் மேலான அதிமுகவை தோற்றுவித்து, வளர்த்து, ஆட்சியையும், அதிகாரத்தையும் சாதாரண மக்களின் கைகளுக்குள் கொண்டு சென்றார். 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தாலும், பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றினார்.

உலகம் போற்றும் சத்துணவுத் திட்டம், பெரியாரின் தமிழ் எழுத்துகள் சீர்திருத்தம், சாதிப் பெயர்கள் நீக்கம்,கிராமப்புறங்களில் நிலவிய அடக்குமுறை பிரபுத்துவ நிர்வாக அமைப்பை ஒழித்தது, பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தனி ஒதுக்கீடு என்று பல சீர்திருத்தங்களை செயல்படுத்தினார்.

எம்ஜிஆரின் தலைமைச் சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு, தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த ஜெயலலிதாவிடம் 30 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாம், எம்ஜிஆர் வகுத்துத் தந்தபாதையில், ஜெயலலிதாவின் வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி, கார்ப்பரேட் விளம்பர தேர்தல் பிரச்சாரம் செய்து, சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசின் திறமையற்ற, ஊழல்மிகுந்த, சுயநலம் மிக்க ஒரு குடும்ப ஆட்சியின் அலங்கோலங்களை தமிழகத்தில் அடியோடு வேரறுக்க அனைவரும் போர்ப்பரணி பாட வேண்டிய நேரம் இது.

எம்ஜிஆர், ஜெயலலிதாபோல பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்ட சூளுரைக்க வேண்டிய நாள்தான் எம்ஜிஆர் பிறந்த நாள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE