சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவசப் பயிற்சிக்காக ஜனவரி 23-ம் தேதி நடைபெற இருந்த நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்திலும், கோவை மற்றும் மதுரையில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணி தேர்வு பயிற்சி நிலையங்களிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2022-ம் ஆண்டுஜூன் மாதம் நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு ஜனவரி23-ம் தேதி 18 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 8,704 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஜனவரி 31-ம் தேதி வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நுழைவுத் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. தேர்வுநடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் 044-24621475 என்ற தொலைபேசிஎண்ணிலும் தொடர்புகொள்ள லாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE