எளிய மக்கள் உரிமைகளுக்கான கருவியாக பத்திரிகைப் பணியைப் பயன்படுத்தியவர் துரைராஜ்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: "எளிய மக்கள் உரிமைகள், ஏற்றத்துக்கான கருவியாக பத்திரிகைப் பணியைப் பயன்படுத்தியவர் துரைராஜ்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி இந்து, ஃப்ரன்ட்லைன், பேட்ரியாட் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”பிடிஐ, தி இந்து, ஃப்ரன்ட்லைன், லிங்க் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரிப் பார்வையும் மனிதநேயப் பற்றும் கொண்டிருந்த துரைராஜ், எளிய மக்களின் உரிமைகள் மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தன் பணியைப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளிலும் பொறுப்பு வகித்த அவர், அடக்குமுறைகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர். அவரது மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகத்துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் இத்தருணத்தில் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்கள்பிரச்சினைகளை எழுதியவர் துரைராஜ்: கே.எஸ்.அழகரி இரங்கல்

மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”தமிழகத்தின் மிகச்சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் தமது 72 வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தொடக்கத்தில் தலைநகர் டெல்லியிலிருந்து வெளிவந்த பேட்ரியாட், லிங்க் ஆகிய ஆங்கில இதழ்களிலும், பிறகு பி.டி.ஐ. செய்தியாளராகவும் பணியாற்றினார். அதை தொடர்ந்து தி இந்து ஆங்கில நாளேட்டிலும், ஃஃரண்ட்லைன் மாதம் இருமுறை ஆங்கில இதழிலும் சிறப்பு செய்தியாளராகவும் பணியாற்றினார்.

பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள், அதற்கான போராட்டங்கள், குறிப்பாக மீனவர் பிரச்சனைகள், பட்டியலின, பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை குறித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, செய்தி சேகரித்து, துணிவுடன் கட்டுரைகளை எழுதியவர். சாதி, மதவாத உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பணியாற்றியவர். சோசலிச, பொதுவுடைமை, முற்போக்கு சிந்தனைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர். பண்டித நேருவின் கொள்கைகளில் தீவிரமான பற்று கொண்டவர். மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மிக நெருங்கிய நண்பர்.

'பேட்ரியாட் துரைராஜ்' என்று அழைக்கப்பட்ட எஸ்.துரைராஜ் அவர்களது மறைவு தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த பத்திரிகையுலக நண்பரை இழந்திருக்கிறேன். இவரது மறைவு பத்திரிகை துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE