பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பென்னிகுயிக் சிலை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்.

ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15ஆம் நாளை தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.

தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகரப் பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக்கின் பெயரைச் சூட்டியது.

தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துகளைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென் மாவட்ட மக்களின் நீண்டகாலத் தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்