கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து: இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழக கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழக கோயில்களில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் பக்தர் களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறைச் செயலர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதேபோல தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சரிகா மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சுகந்தி ஆகியோரும், தனி நீதிபதியின் உத்தரவை ஆதரித்து மதுரை வழக்கறிஞர் ஏ.எஸ்.எம்.முத்துக்குமார், இந்து ஆலய பாதுகாப்புக் குழு இணைச் செயலர்கள் கமலாம்மாள், மைவிழிச்செல்வி, குமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபீட ஆணையர் ஜெய ராமச்சந்திரன் ஆகியோரும் தனித் தனியாக உயர் நீதிமன்றத்தில் இடையீ்ட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், கே.ரவிச் சந்திரபாபு ஆகியோர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

இந்த வழக்கைப் பொருத்த மட்டில் ஒரு சிக்கலான வழக்கில் எத்தகைய முடிவுகளை மேற் கொள்ள வேண்டும் என மேற் கோள் இட்டுச் சென்றுள்ள நீதிபதி பெலிக்ஸ் பிராங்க் பர்ட்டரின் திறமைகளை நினைவுகூர வேண்டியிருக்கிறது. கோயில் களில் உள்ள கடவுளை நிம்மதியாக கும்பிட வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் தேவை எனக் கருதியுள்ள தனி நீதிபதி, ஆண்கள் வேட்டி அல்லது பைஜாமா அல்லது வழக்கமான பேன்ட், ஷர்ட் அணிந்து வர வேண்டும் என்றும், பெண்கள் சேலை அல்லது தாவணி அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும் என்றும், குழந்தைகள் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

உண்மையில் இந்தப் பிரதான வழக்கின் மனுதாரர், கடந்த 2015 நவம்பரில் திருச்சி மாவட்டம் அக்கியம்பட்டியில் உள்ள விநா யகர் கோயில் குடமுழுக்கு திருவிழாவில் நடைபெறவிருந்த ஆடல், பாடல் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டுத்தான் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த விழாவுக்கு பல்வேறு நிபந்தனைகளின்பேரில் அனுமதியளித்த தனி நீதிபதி, கூடவே மனுதாரர் வழக்கில் கோராத ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளையும் சேர்த்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கைப் பொருத்தமட் டில் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியமா? அவசியம் இல் லையா? என்பது இங்கு பிரச்சினை இல்லை. இந்த வழக்கில் இந்த விஷயம் நேரடியாகவோ மறைமுக மாகவோ உள்ளதா? என்பதுதான் பிரச்சினை. இந்த ஆடை கட்டுப்பாட்டால் பொதுமக்கள் மத்தியில் நீண்ட விவாதமே சென்று கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஆதரித்தும் தனித் தனியாக இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் ஆடை கட்டுப்பாடு தேவையா? இல்லையா என்பதை ஒரு விவாதப் பொருளாக்க விரும்ப வில்லை. மேலும் இந்த விவாதத் துக்குள்ளேயே செல்லவும் விரும்பவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கைப் பொருத்த மட்டில் அரசு தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஏற்கப்படுகிறது. மற்ற இடை மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் அவசியமற்றவை என்பதால் அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன, என அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE