தமிழகத்திற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை / புதுடெல்லி: தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தமிழகத்துக்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும் என அவரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் விருதுநகர், கள்ளகுறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டிணம், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை பிரதமர் டெல்லியிலிருந்து காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த மருத்துவ கல்லூரிகளால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் அடைவர்.

மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய அமைச்சர் எல் .முருகன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமண்யம் ஆகியோர் பங்கெடுத்தனர்.

மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்த பிரதமர் மோடி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முதலில் பேசினார். அதனைத் தொடர்ந்து திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, ”இந்தியாவில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் பாஜக ஆட்சிக்கு வந்தபின் 596 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியிலிருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பது இதுவே முதல்முறை. உத்தரப் பிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவ கல்லூரிகள் திறந்ததே சாதனையாக இருந்தது" என்று தெரிவித்தார்.

நீட் விலக்கு: பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஆற்றிய உரை: “அனைவருக்கும் என்னுடைய அன்பான மாலை வணக்கம். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பிரதமர் அவர்கள் கலந்துகொள்ளக்கூடிய முதல் அரசு விழா என்பதால் பிரதமருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துகளையும் நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தனது பல்வேறு பணிகளுக்கிடையே தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக, மாணவர்களின் நலனை மனதில் கொண்டு இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு தங்களின் நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக, பிரதமர் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவாகும். 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்கள். அதில் கல்வி என்ற துணைத் தலைப்பில் ஒரு குறிக்கோளை அறிவித்தார். ''மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடைமுறைப்படுத்துவோம்" என்று அறிவிக்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கத் திட்டமிடுதல்களைச் செய்திருக்கிறோம். 'அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்' என்ற அவரது கனவுதான் இன்றைய நாள் நிறைவேறி இருக்கிறது.

இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்.பி.பி.எஸ். இடங்களையும் - மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு - மருத்துவத் துறையில் நமது நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான அனுமதியையும், ஒத்துழைப்பையும், நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசுக்கும் - குறிப்பாக, இந்தியப் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி கூறக் கூடிய அதேநேரத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மாநில அரசிற்குத் தங்களது அரசு தொடர்ந்து உதவி அளிக்க வேண்டுமென்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மட்டுமன்றி, மக்களுக்குப் பயன் தரும் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், தமிழ்நாடு அரசு, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாட்டிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது.

கண்ணொளித் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 என தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவ்வாறு புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவி வரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாக சேவை செய்வதற்கு தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற - ஏழை - எளிய மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே.

தமிழ்நாட்டின் மருத்துவத்துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே. இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்