பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்கள்; சோறு வைத்தீர்களா? - எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக என்பது ஒரு காந்தாரி மரம், பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களேயொழிய, சோறு வைத்தீர்களா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு வழங்கிய 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை, பொருட்களின் எடை குறைவாக உள்ளது. பொருட்கள் தமிழகத்தில் வாங்கப்படவில்லை என அதிமுக தொடர்ந்து விமர்சித்து வந்தது. இந்த நிலையில் அதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து தங்கம் தென்னரசு சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதிமுக அரசின் திட்டங்களுக்கு, திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை அதில் தெரிவித்திருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டிலே இப்படி ஒரு ஸ்டிக்கரை ஒட்டும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தது யார் ஆட்சி என்பது தான். ஒரு ஆட்சியே, ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களாலே சொல்லப்பட்ட ஆட்சி, அதிமுக ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் வசதியாக மறந்து விட்டாரரா என்று நான் கேட்க விரும்புகிறேன்.

2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கி, கலைஞர் பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆரம்பித்து, தெய்வப்புலவராக இருக்கக்கூடிய திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் போட்டு மறைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அது மாத்திரமல்ல. கஜா புயல் அவர்கள் ஆட்சியிலே வந்து, சென்னையே பெருவெள்ளத்தில் மூழ்கியபோது, பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, அப்படி தனியார் செய்யக்கூடிய அந்த நிவாரணப் பொருட்களில்கூட தங்களுடைய அதிமுக-வினரை வைத்து, அவற்றில் எல்லாம் அவர்களுடைய பெயரையும், ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக்கூடாது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கரும்பிலேகூட, ஒவ்வொரு கரும்புக் கணுக்களில்கூட ஸ்டிக்கரை ஒட்டி விளம்பரப்படுத்திக் கொண்ட ஆட்சிதான் அது.

இன்றைக்கு நம்முடைய முதல்வர் ஆட்சியில், பொங்கல் பையாக இருந்தாலும், எந்தப் பரிசாக இருந்தாலும், அதில் முதலமைச்சருடைய ஒருபடம்கூட இல்லாத ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கியிருக்கக்கூடிய ஆட்சி, திமுக ஆட்சி, நம்முடைய முதலமைச்சருடைய ஆட்சி என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே, அவர்களைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் எல்லாம், அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதற்கு நான் விளக்கங்களை சொல்லியாக வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 2008ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கொண்டு வந்த மிகப்பெரிய, மகத்தான திட்டம். 1928 கோடி ரூபாய் செலவில் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி கலைஞர் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர், இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சராக இருக்கக்கூடிய தளபதி அவர்கள், அன்றைக்கு ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி, அவர் ஜப்பானுக்கு சென்று சீரிய முயற்சிகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, அந்தத் திட்டத்தைத் தன்னுடைய நேரடி கண்காணிப்பில் இருந்து, அந்தத் திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிறைவேற்றி, 95 விழுக்காடு பணிகளை நிறைவேற்றிவிட்டு, ஆட்சிப்பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிய பிறகு, 2013-ஆம் ஆண்டில், 5 சதவீதப் பணியை மட்டும் அவர்கள் பார்த்து, குழாயில் தண்ணீரை மட்டும் அவர்கள் திறந்துவைத்து விட்டு, அதில், இதை ஏதோ அதிமுக செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டதை நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது.

கோயம்பேட்டில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம், கலைஞர் முதல்வராக இருக்கும்போது, சீரும் சிறப்புமாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை, அதிமுக ஆட்சி வந்தவுடன் அதைத் திறந்து வைத்து, தங்கள் பெயரை

ஸ்டிக்கரில் போட்டுவிட்டு, கலைஞருடைய கல்வெட்டை எடுத்துவிட்டு, ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியதைப்போல நாடகம் ஆடினார்கள்.

அருகில் இருக்கும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், கலைஞர் உருவாக்கிய கட்டடம். அதில் ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டு, ஏதோ பெரிய மருத்துவமனையை தாங்கள்தான் அங்கே உருவாக்கியதைப்போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது அதிமுக ஆட்சி.

இன்றைக்கு மருத்துவமனைகளைப் பற்றி, முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது, 2011ஆம் ஆண்டில் நமது முதல்வர் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்து, தமிழ்நாட்டில் 10 அரசு கலைக்கல்லூரிகள் நம்முடைய அரசின் சார்பாக, அதைப்போல, பல்கலைக்கழகங்களின் சார்பாக உறுப்புக் கல்லூரிகளாக அன்றைக்கு அறிவித்தார்கள். அந்த 10 அரசுக் கல்லூரிகளிலும் 2011ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கம் செய்து எல்லா பணிகளையும் முடித்து வைத்தார்.

ஆனால், அவர்கள் 2011-ல் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த 10 கல்லூரிகளும், ஏதோ அதிமுக-வினால் உருவாக்கப்பட்டதைப்போல தங்களை வெளிப்படுத்திக்கொண்டு, தொடர்ந்து அதை அதிமுக கொண்டுவந்ததாக நாடகத்தை ஆடி, அதன் மீது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டினார்களே, அப்போது, இப்போது இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்றைக்கு அமைச்சராக அங்கே அமர்ந்துகொண்டுதானே அதை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். எனவே, ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய இந்த கலாச்சாரம் என்பது, உங்கள் ஆட்சியில் உங்களாலே உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு திறக்க இருக்கக்கூடிய விருதுநகர் மருத்துவக் கல்லூரியும், 2011ஆம் ஆண்டு கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிதான் என்பதை நான் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணிப் பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்தீர்களேயொழிய, சோறு வைத்தீர்களா என்றுதான் நான் அவர்களைக் கேட்க விரும்புகிறேன்.

எனவே, உங்களுடைய திட்டங்களுக்கு, நாங்கள் எங்களுடைய புகழை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒருபோதும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பெரிய ஆலமரம். ஆனால், அதிமுக என்பது ஒரு காந்தாரி மரமாக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமே உதய சூரியன்.

எனவே, திமுக, திமுக ஆட்சி, திமுக திட்டங்கள் என்பதெல்லாம் கோடி சூரியன். அதற்கு வெளிச்சம் பிற இடத்திலிருந்து தேவையில்லை. எனவே, திமுக, கோடி சூரிய ஒளிக்குச் சமம். ஆகவே, அவர்களுடைய ஒளி, வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்குத் தேவைப்படுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திமுக அரசின் திட்டங்களுக்கும் வேறு எந்த விளம்பர வெளிச்சமும், வேறு வெளிச்சங்களும் எங்களுக்கு தேவையில்லை. எனவே, விதைக்கிற நேரத்தில் வெளியூருக்குச் சென்றுவிட்டு, அறுக்கின்ற நேரத்தில் நாங்கள்தான் இருக்கிறோம் என்று அரிவாளை தூக்கிக் கொண்டுவரக்கூடிய இந்தச் செயலை அதிமுக கைவிடவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்