பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் அவர் வெளியிட்டுள்ள வாழ்தது செய்தி:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பொங்கல் வாழ்த்து மடல்.

தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத் திருநாள், அவர்களின் அயராத உழைப்பிற்கு அரிய துணையாகும் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள், மரபார்ந்த மனங்கவர் கலைகளையும் வீர விளையாட்டுக்களையும் வெளிப்படுத்தும் திருநாள். இப்படித் தனித்தனியாக வகைப்படுத்திச் சொல்லாமல் அனைத்தையும் இணைத்து ஒட்டுமொத்தமாக, ‘தமிழர் திருநாள்’ என, பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

பொங்கல் திருநாள் என்றாலே இனிப்பு- இனிமை. அதிலும் இந்த ஆண்டு, நம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு வருகின்ற முதல் பொங்கல் திருநாள் என்பதால் இரட்டிப்பு இனிப்பும் இனிமையும் இதயத்தை நிரப்புகிறது. பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் கருணாநிதியும் பொங்கல் திருநாளே தமிழர்கள் அனைவருக்குமான விழா என்பதை எழுத்துகளாலும் பேச்சுகளாலும் நிகழ்ச்சிகளாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காமல் நிலைபெறச் செய்தனர். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனும், தமிழறிஞர்களும் பொங்கல் விழாவையும், தை முதல் நாளையும் சிறப்பித்துப் பாடினர்.

நிலமகள் நெற்சலங்கை கட்டி ‘தை.. தை.. தை..‘ எனக் குலுங்கி ஆடுகிற தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா நாளில் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் திமுக அரசு, முழுக் கரும்புடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினைப் பல லட்சக் கணக்கான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை கோர வேகம் கொண்டு பரவுகிற நேரத்தில், தமிழ் மக்களுக்கு அச்சமோ பாதுகாப்பற்ற நிலையோ சிறிதளவும் ஏற்படாதவாறு, அவர்கள் வீட்டில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாகக் குரல் உயர்ந்து பொங்கிட, இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசின் தரமான பொங்கல் தொகுப்பு, உரிய முறையில், அனைத்து மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதிசெய்திட வேண்டும் என அதிகாரிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக்கொண்டதுடன், நியாய விலைக் கடைகள் சிலவற்றுக்கு உங்களில் ஒருவனான நானும் நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கு அவற்றை வழங்கி, உறுதிசெய்தேன்.

ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. அது அவர்களின் இதயத்திலிருந்து பொங்கி வழிந்தோடும் மகிழ்ச்சியல்லவா! வீண் - காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை விறகாக்கி அடுப்பெரித்து, இன்பப் பொங்கல் பொங்குவது போல, தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சி பொங்கிடக் கண்டேன். நம்மை நம்பி வாக்களித்த பொதுமக்களுக்கு, அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்துவதில் நமது அரசு மிகவும் உறுதியுடன் இருக்கிறது. பொதுமக்கள் நமக்களித்த இந்த மகத்தான வெற்றியை, தேர்தல் நேரத்துக் களப்பணியின் வாயிலாக உறுதி செய்தவர்கள் நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள்தானே! வெற்றி வீரர்களான உங்கள் முகத்திலும், அகத்திலும் தமிழர் திருநாளில் புன்சிரிப்பு பொங்கிட வேண்டுமன்றோ!

எனது கொளத்தூர் தொகுதியில் வெற்றிக்குப் பாடுபட்ட நிர்வாகிகளுக்கு கழகத்தின் சார்பில் பொங்கல் பரிசுகளை என் கைகளால் வழங்கி மகிழ்ந்தேன். அதுபோலவே, ஒவ்வொரு தொகுதியிலும் அமைச்சர்களும். கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட - ஒன்றிய - நகரக் கழகத்தினரும் அனைத்து நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் கழகத்தின் சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளையும், தனிமனித இடைவெளியையும் தவறாமல் கடைப்பிடித்து, முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்து, பொங்கல் பரிசுகளை வழங்குவதன் வாயிலாக கொரோனா பரவலுக்கு இடமளிக்காமல் செய்து, உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உவகையும், அவர்களின் இல்லத்தில் மாறா மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

தமிழர் திருநாளில் உங்களில் ஒருவனான என்னை நீங்கள் இல்லம் தேடி வந்து சந்திப்பது வழக்கம். அது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கும். ஆனால், கொரோனா அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், பொங்கல் நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக, கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அன்பு கலந்த உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். உலகப் புத்தாண்டு நாளில் இதே வேண்டுகோளை, இதே காரணத்திற்காக விடுத்தேன். அதனை ஏற்றுக் கடைப்பிடித்த உடன்பிறப்புகளின் கட்டுப்பாட்டு உணர்வு கண்டு மெய்சிலிர்த்தேன். தமிழர் திருநாளிலும் அதனைக் கடைப்பிடித்து, கட்டுப்பாடு காத்து, கொரோனா பரவலைத் தடுப்பதற்கு உறுதியுடன் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதுவே நீங்கள் எனக்குத் தரும் இணையிலாப் பொங்கல் பரிசாக அமையும்.

மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன், கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்மை விளையட்டும். அனைவருக்கும் தை முதல் நாளாம், இனிய பொங்கல் - இன்பத் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்