கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,000 ஆக உயர்த்துக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தலைப்புச் செய்தியாக கொடுக்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பு திமுக அரசினால் வெளியிடப்பட்ட செய்தி வெளியீட்டில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. இந்த வகையில், நான் முதல்வராக இருந்த காலகட்டமான 2016-2017ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதே சமயத்தில் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கியதையும், மகாராஷ்டிராவில் 2,475 ரூபாய் வழங்கியதையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலுள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், மத்திய அரசின் நியாயமான மற்றும் ஆதாய விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என்ற விலையுடன் மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் சேர்க்கப்பட்டு, ஒரு டன் கரும்பின் விலை 2,850 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இது 27-12-2016 நாளிட்ட செய்திக்குறிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் கேட்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டி, விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், அதனை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என்றும் அறிவித்ததையும், திமுக தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால், தற்போது விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில், 2020-21ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையான கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2,707 ரூபாய் 50 காசு என்பதுடன் உற்பத்தி ஊக்கத் தொகையாக 42 ரூபாய் 50 காசு மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 150 ரூபாய் என மொத்தம் 192 ரூபாய் 50 காசு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2,900 ரூபாய் கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு 08-01-2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின் மூலம் அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்,

ஆட்சிக்கு வந்தால் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று எட்டு மாதங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்தவர், இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு 2,900 ரூபாய் என்று அறிவிப்பது என்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். 'சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற அளவில் திமுக-வின் செயல்பாடு இருக்கிறது. இதற்கு அனைத்திந்திய அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சொன்னதையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு செய்வதையும் ஒப்பிட்டு, அதனை அரசுக்குச் சுட்டிக்காட்டி நினைவுபடுத்துவதும், அதனை நிறைவேற்ற வலியுறுத்துவதும் எதிர்க்கட்சியின் கடமை என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு இதைக் கொண்டு வருகிறேன்.

இதில் உடனடியாக முதல்வர் தலையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் வாக்குறுதியான கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்பதையாவது நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சார்பாகவும், அஇஅதிமுக சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்