நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை: பரமத்தி வேலூர் பகுதியில் வெல்லம் உற்பத்தி தீவிரம்

By கி.பார்த்திபன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், மோகனூர் வழியாக காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இந்த பகுதிகளில் கரும்பு, வாழை மற்றும் வெற்றிலை உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரும்பு சாகுபடியை மையப்படுத்தி மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பரமத்தி வேலூர் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

பரமத்தி வேலூர், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் 200-க்கும் அதிகமான வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல மண்டிக்குவிற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மற்றும் கேரள மாநில வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்று வெல்லத்தை வாங்கிச் செல்கின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வெல்லம் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து பரமத்தி வேலூரைச் சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது;

பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரத்தில் 200 வெல்லம் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலைகளில் உருண்டைவெல்லம், அச்சு வெல்லம் போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 30 கிலோஎடை கொண்ட சிப்பங்களாக (மூட்டை) கட்டி பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல மண்டி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வெல்ல ஏல மண்டி கூடும். சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிப்பங்கள் விற்பனையாகும். தற்போதைய சூழலில் 30 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்ல சிப்பம் ரூ.1,250 முதல் ரூ.1,280 வரை விற்பனை செய்யப்படுகிறது. அச்சு வெல்லம் ரூ.1,300 முதல் ரூ.1,400 வரை விலை கிடைக்கிறது. வெல்லத்துக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கேயே கொள்முதல் செய்தால் வெல்லத்திற்கு கூடுதல் விலை கிடைக்கும். அடுத்த ஆண்டாவது தமிழகத்தில் வெல்லத்தை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவது போல் வெல்லமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE