சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாகப் பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாகப் பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில், ''சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினப் பொதுப்பிரிவுக்கு 16 வார்டுகள், பட்டியலினப் பெண்களுக்கு 16 வார்டுகள் என ஒதுக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 168 இடங்களில் பெண்களுக்கு 89 இடங்களும், பொதுப் பிரிவுக்கு 79 இடங்களும் ஒதுக்கி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மண்டல வாரியாக வார்டுகளைப் பிரித்து ஒற்றைப் படை வரிசையில் உபரியாக இருக்கும் வார்டைப் பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்குப் பொது வார்டுகளை விட கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்த நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் பொதுப் பிரிவுக்கும், பெண்களுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும். மண்டல வாரியாகப் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 இடங்களில், 105 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதால் இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மொத்த இடங்களில்தான் வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக் கூடாது என்றும், பெண்களுக்கு வழங்குவதை எதிர்க்கவில்லை என்றும் வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சென்னையைப் பொறுத்தவரை மத்தியப் பகுதியில்தான் பெண்கள் அதிகம் என்றும், புறநகர்ப் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதால் அதனை மீறக்கூடாது எனத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை என்பதால், 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும், ஆனால் அது மொத்த வார்டுகளின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமெனக் கூறி, நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்