ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா எனக் கண்காணிக்க வேண்டியது அவசியம்: அதிகாரிகளிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அறிவிப்புகள் ஆணைகளாக மாறலாம், ஆணைகள் செயல்பாட்டில் வந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டியது அவசியம் என்று தமிழகத்தின் உயர் அதிகாரிகளிடம் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இன்று (11-1-2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் விதி 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார். பின்னர், ஆளுநர் உரையில் வெளியிடப்பட்ட 66 அறிவிப்புகள் குறித்தும், முதல்வரின் செய்தி வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட 95 அறிவிப்புகள் குறித்தும், விதி 110-ன்கீழ் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட 43 அறிவிப்புகள் குறித்தும், முதல்வரின் 37 இதர அறிவிப்புகள் குறித்தும், நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட 194 அறிவிப்புகள் குறித்தும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட 100 அறிவிப்புகள் குறித்தும், அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின்போது வெளியிடப்பட்ட 1106 அறிவிப்புகள் குறித்தும், ஆக மொத்தம் 1641 அறிவிப்புகள் குறித்து துறைவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், ஆய்வின் இறுதியில் தமிழக முதல்வர் ஆற்றிய உரை பின்வருமாறு:

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறைச் செயலாளர்களே! அனைத்துத் துறைகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என்பதை இந்த ஆய்வின்மூலம் அறிய முடிகிறது. கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் அனைத்துத் துறைச் செயலாளர்களுடனும் எனது முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன். அதுவரை செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிடக் கேட்டுக் கொண்டேன். தலைமைச் செயலாளரும் மாதம்தோறும் அனைத்து அரசுச் செயலாளர்களோடும் ஆய்வுகளை நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறார். இந்தத் தொடர் கண்காணிப்பின் வாயிலாக இதுவரை மொத்தம் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,313 அறிவிப்புகள், அதாவது 80 விழுக்காடு அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் 10.01.2022 வரை சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். மீதமுள்ள அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகளையும் உடனடியாக வெளியிட்டு 100 விழுக்காடு இலக்கினை அடைய வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள்.

ஆணைகள் வெளியிடப்பட்டவுடன் நம்முடைய பணி நிறைவு பெறவில்லை என நான் ஏற்கெனவே கூறியதை தங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா எனத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆணைகள் வெளியிடப்பட்ட பணிகளுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுவதை இனி நீங்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்.

அரசுச் செயலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 2 முறை மாவட்டங்களுக்குச் சென்று பல்வேறு நலத் திட்டங்களின் செயல்பாட்டினை அறிந்து, உரிய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து நீங்கள் எடுத்த நடவடிக்கை, வழங்கிய ஆலோசனைகள், சிறப்பாகச் செயல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து என்னுடைய அடுத்த மாத ஆய்வுக் கூட்டத்தில் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

• வரும் ஆண்டிற்கான திட்டங்களை இப்போதே திட்டமிடுவதற்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

• மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 20 அறிவிப்புகளில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்ந்து தொடர்புகொண்டு உரிய முறையில் வலியுறுத்தி தேவைப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும், ஒப்புதல்களையும் பெற ஆவன செய்யுமாறும் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

• உங்களுக்கு நீங்களே ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

• இந்த ஆண்டுக்கான திட்டங்கள் - அடுத்த நான்கு ஆண்டுக்கான திட்டங்கள் - 2030 வரையிலான திட்டங்கள் என திட்டமிட வேண்டும்.

இத்தகைய செயல் திட்டம் (Road Map) ஒன்றை உருவாக்கிட வேண்டும். Think big, Dream big, Results will be big என்கிற கூற்றின்படி நமது சிந்தனைகளும், கனவுகளும், குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும்.

நம்மை, நம்மை விட அதிகமாக வளர்ந்தவர்களோடு ஒப்பிட வேண்டும். நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு நாம் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறோம் என்ற மனநிலையினைத் தவிர்க்க வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நம்முடைய இலக்குகள் அனைத்தும் திட்டம் அடிப்படையில் மட்டுமே இல்லாமல், நாம் அடைய வேண்டிய நோக்கத்தினைச் சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நீர் வளங்களை மேம்படுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும், சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வீடு என்கிற இலக்கினை அடைவதற்கும், தொழில் துறையில் உயரிய வளர்ச்சியினை எய்துவதற்கும், நம்முடைய இளைய சமுதாயத்தினரின் திறனை மேம்படுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதற்கும், தொடர்புடைய துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டு முயற்சியுடன் செயல்படுவதுடன், இந்த உயரிய நோக்கங்களின் இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறைகளின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்வது தொடர்பாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் முதல்வரின் தகவல் பலகை (DASH BOARD) ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தகவல்களைக் கொண்டு, நான் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இந்தத் தகவல் பலகையில் இந்த அரசு வெளியிட்டு வரக்கூடிய அனைத்து அறிவிப்புகள், அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் இடம்பெற்றுள்ளன. அதில் உங்களது தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுங்கள்.

அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து அடுத்த மாதம் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதற்குள் விடுபட்ட திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுங்கள். புதிய திட்டங்களைக் கொண்டு வாருங்கள். அறிவித்தவை செயல்களாக ஆகட்டும். நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும். மக்களுக்கான அரசு இயந்திரமாக எந்நாளும் செயல்படட்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழக முதல்வரின் அறிவுரைக்கேற்ப, அனைத்துத் துறைச் செயலாளர்களும் செயல்பட்டு, அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்'' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்