மாநகராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்புடன் குப்பைக் கிடங்கில் இரவில் குப்பை கொட்டும் நிறுவனங்கள்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சியில், ஊழியர்களின் ஒத்துழைப்புடன், குப்பைகிடங்குகளில், தனியார் நிறுவனங்கள் குப்பையை கொட்டுவதாகவும், இதற்கு மாதம் பல ஆயிரம் லஞ்சம் பெறப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம் ஆகிய 2 இடங்களில் குப்பை கிடங்குகள் உள்ளன. தாம்பரம் மாநகராட்சியில் தினமும் 300 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைசேகரமாகிறது. இது 2 இடங்களில் உள்ள கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.

பின்னர் இங்கிருந்து செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஆப்பூர் கிராமத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. சில மாதங்களாக இந்த 2 பகுதிகளிலும் உள்ள குப்பை கிடங்குகளில் தொழில்நிறுவனங்கள் இரவு நேரங்களில் குப்பையை கொட்டி வருவதாகவும் அதற்கு பெரிய தொகை மாதா மாதம் பெறப்படுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை, தங்கள் நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை அவர்களே தரம் பிரித்து கையாள வேண்டும் என 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் தனியார் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் குப்பையை முறையாக கையாளாமல் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்குகளில் இரவில் கொட்டி வருகின்றன.

இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் வந்து கொட்டப்படும் குப்பைக்கு அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1 முதல் 2 லட்சம்வரை வழங்கப்படுகிறது. அவ்வாறு குப்பையை கொட்ட வரும்வாகனங்கள் பிடிபட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

சில தினங்களுக்கு முன் ரேடியல் சாலையில் இரவு நேரத்தில் குப்பை கொட்ட வந்த கன்டெய்னர் லாரி ஒன்றை பிடித்த சிட்லபாக்கம் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் லாரியை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE