சென்னை: நகைக் கடன் தள்ளுபடி என்கிற தமிழக அரசின் அறிவிப்பு மிகப்பெரிய குழப்பத்தை, விவாதத்தை, விமர்சனத்தை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' எனக் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அதாவது 40 கிராம் வரை அடகு வைத்துப் பெற்ற நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நகைக் கடன் தள்ளுபடிக்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள், தகுதியில்லாதவர்கள் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டது. 48,84,726 நகைக்கடன் விவரங்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் 35,37,693 கடன்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதவை என்றும், 13,47,033 நகைக் கடன்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவை என்றும் அறிவிக்கப்பட்டது.
» நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கரோனா: பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பரிசோதனை
அரசாணைப்படி யாரெல்லாம் நகைக் கடன் பெறத் தகுதியுள்ளவர்கள்?
* தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து அவர்களின் மொத்த நகைக் கடன்களின் மொத்த எடை 40 கிராம் வரை அதாவது 5 பவுன் வரை இருந்தால் இதர தகுதிகளுக்குட்பட்டு அவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்ற குடும்பத்தினர் 31.3.2021ஆம் நாள் வரை 5 பவுனுக்கு (40 கிராம்) மிகாமல் உள்ள நகைகளுக்கு ஈடாகப் பெற்ற மொத்த நகைக் கடன்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள தொகையைப் பகுதியாகச் செலுத்தியது நீங்கலாக, மீதம் உள்ள பொது நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்.
* பொது நகைக் கடன்கள் பெறுவதற்கு இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்ட 31.3.2021 வரை தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்ற நகைக் கடன்களின் கணக்கில் அவர்கள் பகுதியாக செலுத்தியிருப்பின் அவ்வாறு பகுதியாகச் செலுத்திய நிலுவைத்தொகை நீங்கலாக மீதம் நிலுவையில் இருந்த தொகை (அசல்- வட்டி- அபராத வட்டி, இதர செலவீனங்கள் ஏதேனும் இருப்பின்) மட்டும் தள்ளுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
* 31.3.2021ஆம் தேதியில் தகுதி பெற்ற கடன்தாரர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்களின் கணக்கில் நிலுவை இருந்து அதன் பின்னர் அரசாணை வெளியிடப்படும் நாள் வரை கடன் நிலுவைத்தொகை பகுதியாகச் செலுத்தப்பட்டிருந்தால் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகை நீங்கலாக எஞ்சிய கடன் நிலுவைத்தொகை மட்டுமே தள்ளுபடியில் இடம்பெற வேண்டும்.
* தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் எண் விவரங்களைச் சரியாக அளித்தவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்
* மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
* தமிழக அரசின் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.
* தற்போது வரை செல்லுபடி ஆகக்கூடிய குடும்ப அட்டை வைத்துள்ள நகைக் கடன்தாரர்கள் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.
நகைக்கடன் பெறத் தகுதியில்லாத நபர்கள்:
* தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் வழங்கப்பட்டுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொது நகைக்கடன்கள் பெற்றிருந்து அவர்களின் மொத்த நகைக் கடன்களின் மொத்த எடை 40 கிராமுக்கு மேல் அதாவது 5 பவுனுக்கு மேல் இருந்தால் அவர்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.
* 31.3.2021ஆம் நாளுக்குப் பிறகு நகைக் கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்படாது.
* குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு நகைக் கடன் தள்ளுப்படி செய்யப்படாது.
* ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்குத் தள்ளுபடி கிடையாது.
* கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர். கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினருக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை.
* நகைக் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாகப் பெற்ற அந்தியோதயா அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* நகைகளே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக் கடன்களுக்குத் தள்ளுபடி இல்லை.
* போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட நகைக் கடன்களுக்குத் தள்ளுபடி கிடையாது.
* சுய விருப்பத்தின் பெயரில் நகைக் கடன் பெற விருப்பமில்லாதவர்கள் படிவம் 3-ல் உறுதிமொழிச் சான்று தர வேண்டும்.
* தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த குடும்ப அட்டையை வைத்திருப்பவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
* ஆதார் அட்டையில் தமிழக முகவரி இல்லாமல் ஆந்திரா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முகவரி இருந்தால் அவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது.
அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு
அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
''75 சதவீதம் பேருக்கு நகைக் கடன் தள்ளுபடி இல்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இந்தச் செயல் நம்பிக்கை துரோகம். அனைவரின் நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
''திமுக வாக்குறுதி அளித்தவாறு இல்லாமல் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே ஏற்புடையது என்று அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது'' என்று தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார்.
''நகைக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசு நம்பிக்கை மோசடியைச் செய்துள்ளது. நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றீர்கள். ஆனால் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! மக்களை நகைக்கடன் வாங்கும்படி உதயநிதி ஸ்டாலின் நிர்பந்தித்தது ஏன்?'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
''பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக் கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது'' என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் திமுக வாக்குறுதி அளித்தது. அப்போது எந்த நிபந்தனையையும் தெரிவிக்கவில்லை. தற்போது கடும் நிபந்தனைகள் விதித்து, 70%க்கும் அதிகமானோருக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. முறைகேடு செய்தவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தள்ளுபடி சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்
''கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 48,84,726 நகைக்கடன்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,65,738 நகைக்கடன்கள் தனி நபர்கள் 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை.
21,03,441 நகைக்கடன்கள் அனைத்தும் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றவர்கள் சேர்ந்து 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை. 2,20,748 நகைக்கடன்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்களைப் பயன்படுத்தி அடகு கடைக்காரர்கள் முறைகேடாகப் பெற்றவை,
2,13,887 நகைக் கடன்கள் ஏற்கெனவே பயிர்க் கடன் தள்ளுபடி மூலம் பலன் அடைந்தவர்கள். 2,33,879 நகைக் கடன்கள் போலி நகை, நகைகளே இல்லாத காலி பொட்டலங்கள் முதலான விதிமீறல்கள் என கண்டறியப்பட்டவை. இவை அனைத்தும் நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதவை.
13,47,033 நகைக் கடன்கள் மட்டுமே தற்போது தள்ளுபடிக்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, 40 கிராமுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 22,52,226 ஆகும். இவர்களில் தற்போது தள்ளுபடிக்குத் தகுதியானவர்கள் 10,18,066 பேர்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களில் 2 லட்சம் பேர் கோடிக்கணக்கில் நகைக்கடன் பெற்றுள்ளனர். அவர்களின் ஏஏஒய் அட்டையைப் பயன்படுத்தி குறுக்குவழியில் சிலர் கடன் பெற்றுள்ளனர். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் அட்டைகளைப் பெற்று நகை அடமானக் கடைக்காரர்கள்தான் கடன்களைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்பவர் 672 நகைக்கடன்களை வாங்கியுள்ளார். அதுவும் ஐந்து சவரனுக்குக் கீழ்தான் ஒவ்வொரு கடனையும் பெற்றுள்ளார். இது எப்படி சரியாகும். மக்களின் வரிப்பணத்தைத் திருட்டுத்தனமாகப் பெற்றுள்ளனர்.
வெறும் பையை மட்டும் கொடுத்து 203 நகைப் பொட்டலங்கள் இருப்பதாகக் கணக்கு காட்டி 2 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நகையே இல்லாமல் கடன் கொடுத்துள்ளனர். கவரிங் நகைகளை வைத்தும் கடன் பெற்றுள்ளனர். இதுதவிர, பல்வேறு வகைகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். கடன் தள்ளுபடி பெற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பெற்றிருந்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?'' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தார்.
முறைகேடுகளைக் கண்டறிந்து மோசடி செய்தவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கிரிமினல் புகார் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இவர்களுக்காக ஏழை எளிய மக்களின் நலன் புறக்கணிக்கப்படக் கூடாது.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் உள்ள வறியோரிலும் வறியோராகக் கருதப்படும் குடும்ப அட்டைதாரர்களின் நகைக் கடன் 40 கிராமுக்கு மேல் இருந்தாலும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் வருவாய்க் குறைவு, வேலை இழப்பு, பொருளாதாரப் பிரச்சினைகளால் நடுத்தரக் குடும்பத்து மக்களும் ஏழை எளிய மக்கள் என்ற விளிம்பு நிலைப் பட்டியலில் சேர்ந்துவிட்டனர். அதன் அடிப்படையில் 40 கிராமுக்கு மேல் நகைக் கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி இல்லை என்று முற்றாக ஒதுக்கிவிடாமல் 40 கிராம் வரையில் தள்ளுபடி கொடுப்பதே அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை ஓரளவு குறைக்க முடியும்.
பயிர்க் கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அறிவிப்பது நியாயமல்ல. சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக இரண்டையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரசாணையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோக்கம் சரியான விதத்தில் சென்று சேர, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி மக்கள் முகத்தில் புன்னகையை மலரச் செய்ய இந்த மூன்று கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதும், நிபந்தனைகளைத் தளர்த்துவதும் அவசர அவசியம்.
வீடியோ வடிவில் காண:
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago