தமிழகத்தில் ஒரு யூனிட் மணல் ரூ.1000 ஆக நிர்ணயம்: 24 மணிநேரமும் குவாரிகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு ரூ.1000-ஐ விலையாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளி வியாபாரம் செய்ய குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆற்று மணல் ஒரு யூனிட் விலை ரூ.300 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதில் முறைகேடுகள் எழுந்ததால் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை நீர்வள ஆதாரத்துறை விதித்துள்ளது.

அதன்படி, தற்போது ஒரு யூனிட் ஆற்று மணலுக்கான விலை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மணல் வேண்டுவோர், மணல் டிப்போக்களில் உள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் பணம் செலுத்தலாம். ஆற்று மணலுக்கு பதிவு செய்யும்போது, அங்கீகரிக்கப்பட்ட கட்டிட அனுமதி தேவை. மணல் எடுக்கப்படும் குவாரிகளில் அனைத்து நிகழ்வுகளும் 24 மணிநேரமும் ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும். மணல் தொடர்பான, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அனைத்தும் கண்காணிக்கப்படும்.

மேலும், ஆற்று மணலுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவின் போதே மணல் அள்ளிச்செல்லும் வாகனங்கள் தொடர்பான விவரங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

மணல் முன்பதிவுக்கான செயலியும் புதுப்பிக்கப்படும். அடுத்த 2 மாதங்களில் புதிய மணல் குவாரிகள் மற்றும் டிப்போக்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE