ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக சென்னையில் ஒரே நாளில் 7,616 பேர் மீது வழக்கு

சென்னையில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரே நாளில் 7,616 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு சோதனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் தங்களது எல்லைக்கு உட்பட்ட சந்தைகள், கடற்கரைகள், கடைவீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். நேற்று முன்தினம் 312 வாகனத்தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டன.ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், முகக்கவசம் அணியாமல் சென்ற 7,616 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சத்து 23 ஆயிரத்து 200அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 428 வழக்குகளும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து 707 இருசக்கர வாகனங்கள், 59 ஆட்டோக்கள், 21 இலகு ரக வாகனங்கள் உட்பட மொத்தம் 788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் நடத்திய சோதனையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 15 இருசக்கர வாகனங்கள், 8 ஆட்டோக்கள், 5 இலகுரக வாகனங்கள் உட்பட மொத்தம் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறப்புக் குழுக்களின் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE