தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிக்காக அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர்களுக்கு தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏராளமான ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் வணிகரீதியிலான தயாரிப்புகளாக வெளியே வரவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் தொழில்முனைவு சிந்தனையை ஏற்படுத்த வேண்டும். அடுத்த10 ஆண்டுகளில் அறிவுசார் பொருளாதாரம்தான் முன்னணியில் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பதிவாளர் ஜி.ரவிக்குமார் பேசும்போது, மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க வேண்டுமானால் கல்லூரிபாடத்திட்டத்தில் தொழில்முனைவு பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு புதிய தொழில்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இயக்கத்தின் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜன் ராமநாதன் பேசும்போது, “2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார். தொழில்முனைவு வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப புதிய கொள்கைஉருவாக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

பல்கலைக்கழகத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் ஆர்.சரவணன், இயக்குநர் (திட்டம் மற்றும் மேம்பாடு)டி.மோகன்லால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை எடுத்துரைத்தனர். நிறைவாக,இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன தொழில்முனைவுத்துறை இயக்குநர் டி.கே.ஷிபின் முகமது நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE