புதுக்கோட்டை சிறுவன் உயிரிழந்த விவகாரம்; துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களை ஆய்வு செய்ய தனி குழு அமைப்பு: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களை ஆய்வு செய்ய தனியாக குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு துப்பாக்கி குண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (11) என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களையும் ஆய்வு செய்ய தனியாக குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள துப்பாக்கி சுடும் மையங்களை ஆய்வு செய்து, அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து அறிக்கை கொடுப்பார்கள். துப்பாக்கி சுடும் மையங்கள் மலைப்பகுதிகளுக்கு அருகே இருக்கவும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலகி இருப்பது குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவுள்ளனர். அந்த அறிக்கையின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE