சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதததால் மாநில உரிமை கேள்விக்குறியாகியுள்ளது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (8-1-2022) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில், திமுக சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு.செல்வப்பெருந்தகை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜி.கே.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தி. சதன் திருமலைக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எம் சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றுத் தொடக்கவுரை ஆற்றினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசியதாவது:
''அனைவருக்கும் அன்பான வணக்கம். நீட் தேர்வு தொடர்பாக அவசரமாகக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் என் வணக்கத்தையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நீட் தேர்வு கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒரு கருத்து கொண்டவர்கள்தான். நமக்குள் அதில் மாறுபாடும் வேறுபாடும் இல்லை. அந்த ஒற்றுமையைக் காட்டுவதற்காக இன்று நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம். இது தமிழகத்தின் பிரச்சினை - தமிழக மாணவர்களின் பிரச்சினை - ஆகவே இதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற கருத்துருவாக்கம் மிகவும் தேவைப்படுகிறது. கல்வி நீரோடையானது அனைவருக்கும் பொதுவானது. அதனால் பயன்பெற அனைவருக்கும் உரிமை உண்டு.
இந்தியா போன்ற ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் வாழும் நாட்டில் - வறுமை சூழ்ந்த நாட்டில் – சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை இருக்கும் நாட்டில் இத்தகைய கல்வியை அனைவரும் அடைவது என்பதே மிகப்பெரிய, சிரமமான காரியமாக இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அந்த ரத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது - ஏன் உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது என்பதை இந்தக் கூட்டத்தில், இந்த மன்றத்தில் நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அப்படிப் பெற்ற அந்தக் கல்வி உரிமையை இந்த நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை நாம் அனைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பன்னிரண்டாம் வகுப்பு வரை கற்ற கல்வியை விட மேலானதாக நீட் என்ற இரண்டு மணி நேரத் தேர்வு அமைவதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இது சமூக அநீதி அல்லவா? லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எத்தனை பேர் நீட் தேர்வு எழுத பயிற்சி பெற முடியும்?
அதனால்தான் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் - முதலில் இந்தியப் பிரதமரை 17.6.2021 அன்று நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை 13.9.2021 அன்று நம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அந்த சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் மாநில ஆளுநர்.
ஒரு சட்டப்பேரவை - தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, அதை ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். ஆகவே, நான் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும் - சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானதால்தான் - அவசரமாக - ஏன் அவசியத்துடன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். இங்கே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒரு வரைவுத் தீர்மானத்தை உங்களிடத்தில் எடுத்துரைப்பார்.
நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழக மாணவர்களின் நலனைக் காப்பாற்றிட வேண்டும் என்பதுதான். ஆகவே இந்த வரைவுத் தீர்மானத்தின் மீது தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள்''.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago