நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட ஒன்றிணைந்த சட்டப் போராட்டம்: தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தை ஒன்றிணைந்து மேற்கொள்வது என தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (8-1-2022) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமழக முதல்வர் தொடக்க உரையாற்றி அனைவரையும் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: மருத்துவத் துறையில் தமிழ்நாடு இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு திருத்தச் சட்டம் மற்றும் அதன்பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்நிறுத்தி நமது மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது. மாநில அரசு நிதியிலிருந்து- மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது, இதுபோன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிப் பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும். இந்த நீட் தேர்வை மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது. ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டிடவும், நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த சட்ட முன்வடிவினை மாநில ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்வரே நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து நீட் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நேரத்தில், அவரை சந்திக்க இயலவில்லை என்பதால், மனுவினை அவரது அலுவலகத்தில் அளித்து, அன்று மாலையே அம்மனுவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கோரி, பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால், அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து, இன்றைக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்து கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்த பின், தமிழக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பிரதிநிதிகள்: இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சி. விஜய பாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு.செல்வப்பெருந்தகை, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வானதி சீனிவாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தி. சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ரா. ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி. வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக வெளிநடப்பு: பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உரையாற்றிய வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றிட உடன்பாடில்லை என்று தங்களது கட்சியின் சார்பில் தெரிவித்து, கூட்டத்திலிருந்து சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்