ஊதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசாணை 354 ன் படி ஊதியம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி ஜனவரி 19ல் தர்ணா நடத்தப்போவதாகவும் மற்றும் பிப்ரவரி 10ல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம் வருமாறு.

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசாணை 354 ன் படி ஊதியம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஜனவரி 19ல் தர்ணாவும், பிப்ரவரி 10ல் உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்படும்.

1) கரோனா பேரிடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம். கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்த போதும், இங்கு தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறோம்.

2) இருப்பினும் இங்கு எப்போதுமே அரசுக்கு உறுதுணையாக உள்ள அரசு மருத்துவர்கள் மீது முதல்வரின் பார்வை விழவில்லை என்பது தான் ஏமாற்றமளிக்கிறது. அதுவும் புதிய ஆட்சி அமைந்து 8 மாதங்களுக்கு பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற வலி ஒவ்வொரு மருத்துவரிடத்தும் அதிகமாகவே இருக்கிறது.

3) தமிழக சுகாதாரத் துறை 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதும், தற்போது எப்படி உள்ளது என்பதும் அனைவருக்கும் நன்றாக தெரியும். இருப்பினும் இந்த அளவுக்கு சுகாதாரத் துறையை வலுப்படுத்த தங்கள் பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை வழங்கி, அவமானப்படுத்துவதை நம் முதல்வர் நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

4) தமிழகத்தில் சுகாதாரத் துறையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற தன் ஆர்வத்தை நம் முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார்கள். அதேநேரத்தில் உலகிலேயே தமிழகத்தில் தான் மருத்துவர்கள் தங்களின் சம்பளத்திற்காக, பல வருடங்களாக, தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

5) பல மாநிலங்களில் இன்னமும் கிராமங்களில் மருத்துவர் இருப்பை உறுதி செய்வதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் கிராமப்புற சுகாதார சேவையில் முதல் இடத்தில் உள்ள தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு அரசு மறுத்து வருவது தான் வருத்தமளிக்கிறது.

6) அதுவும் 2009 ம் ஆண்டில், டாக்டர் கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354 ல், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை தருவதற்கு வழிவகை செய்யப்பட்டும், இதுவரை தரப்படவில்லை. இத்தனைக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது.

7) ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரை பணியாற்றி வரும் இளைய மருத்துவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக எத்தனையோ சவால்களை சந்தித்து வரும் அரசுப் பணியில் இருக்கும் முதல் தலைமுறை மருத்துவர்களை ஊக்குவிப்பதாக அமையும்.

8) மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

9) கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் குறைவாக ஊதியம் தரப்படுவது என்பது நம் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுவதையே காட்டுகிறது.

10) மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களின் ஊதியத்தை விட, தமிழகத்தில் பணி செய்யும் சிறப்பு மருத்துவர்களின் ஊதியம் மிக குறைவாக இருப்பது எந்த வகையில் நியாயம்? கொரோனா சமயத்தில் கூட மருத்துவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

11) மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்ற டாக்டர் கலைஞரின் கொள்கையை செயல்படுத்தி வருவதாக முதல்வர் பெருமையாக கூறுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட டாக்டர் கலைஞர் கொடுத்த அரசாணை 354 க்கு உயிர் கொடுப்பதோடு, உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்திட வழிவகுக்கும் நடவடிக்கையை எடுக்க அரசு மறுப்பது ஏன்?

12) வருகின்ற ஜனவரி 12 ம் தேதி புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான தொடக்க விழாவை பிரதமர் தலைமையில் சிறப்பாக நடத்த இருக்கிறார்கள். இருப்பினும் அதற்கான பங்களிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களின் வேதனையை அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது.

13) மேலும் தமிழகத்தில் பணி செய்யும் அரசு மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் வந்தவர்கள். இந்த நிலையில் இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க, வருடம் முழுவதும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தொடர்ந்து மறுக்கப்படுவதை, நம் முதல்வர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கருதுகிறோம்.

14) கரோனா தொடங்கியது முதல், தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், ஊரடங்கை அமுல்படுத்துவதற்கும் மருத்துவ வல்லுந‌ர்களின் ஆலோசனையை தவறாமல் கேட்கிறார்கள். அதுபோல அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கொரோனாவோடு போராடி மக்களை காப்பாற்றி வருகிறோம். இருப்பினும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு கூட அரசு மறுத்து வருவது தான் வேதனையை தருகிறது.

15) எனவே தற்போது அச்சுறுத்தி வரும் ஓமைக்ரானை எதிர்கொள்ள, தமிழகத்தின் பலமாக உள்ள, அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியம் கிடைத்திட தமிழக முதல்வர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என வேண்டி, விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். அதுவும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை இப்போது நிறைவேற்றுவதன் மூலம் இந்த அசாதாரண சூழ்நிலையில், தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அரசு மருத்துவர்கள், இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகுக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

16) இதற்கு மேலும் அரசு மருத்துவர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ளாவிடில், சென்னையில் வருகின்ற 19.1.22 அன்று தர்ணா போராட்டமும், 10.2.22 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் மேற்கொள்ள இருக்கிறோம் என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்