சென்னை: "இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (ஓபிசி) 27% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சமூக நீதியின்பால் பற்றுகொண்ட திமுகவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. சமூக நீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!" என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறேன். கடந்த பல ஆண்டுகாலமாக திமுக, அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. இது சமூக நீதியைப் பற்றிய புரிதலும் ஆழமான பற்றுதலும் கொண்ட திமுகவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி! சமூக நீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்.
இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள கோடானகோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்ச நீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்ற இயக்கம் திமுக என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தமிழ்நாட்டில் திமுகவும் சமூக நீதியின்பால் பற்றுகொண்ட இயக்கங்களும் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத் தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது இந்த வெற்றி.
மிகுந்த மனநிறைவோடு இந்தப் போராட்டத்தில் துணைநின்று பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை, ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் திமுக வாதாடி வந்ததைப் பெருமையோடு நினைவுகூர்கிறேன். உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்காடி வென்றோம். இப்போது இறுதிக்கட்டமாக அதைத் தடுக்கும் முயற்சியையும் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, கழகம் முறியடித்திருக்கிறது.
» நீட் தேர்வு விலக்கு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
» இலங்கையில் சீனாவுக்கு ‘செக்’- கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டியை குத்தகைக்கு எடுத்தது இந்தியா
நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு தொடக்கத்தில் உணர மறுத்தது வேதனைக்குரியது. சென்னை உயர் நீதிமன்றத்திலும்கூட இட ஒதுக்கீடு வழங்க மறுத்து வழக்காடியது. இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த பிறகும்கூட, மத்திய அரசு அதை அமல்படுத்த முன்வரவில்லை. அதற்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும்கூட திமுக தொடர்ந்தது.
அக்கறையின்மையாலும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியின் காரணமாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி இப்போது துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு முனைப்பு காட்டி இருந்தால், இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். அதன் மூலம் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு உரிய பலனைப் பெற்றிருப்பார்கள். சமூக நீதியின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடும், சமூக நீதியில் மாறாத பற்றைக் கொண்டுள்ள திமுகவும் அளித்துள்ள பங்களிப்பு வரலாற்றில் நிச்சயம் இடம்பெறும்.
அண்மைக் காலத்தில் எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த மாநில மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமன்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் அதன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலை. அதை நோக்கிப் போராடுவதோடு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் ,தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் எதிர்காலத்தில் முயற்சிகளைத் தொடர்வோம்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர் சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தொடர்பாகத் திமுக தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது. நேற்று நடந்த வாதத்தின்போதும்கூட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டையும் , உயர் சாதியினருக்கான ஒதுக்கீட்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும், சமமற்ற இரு பிரிவினரை சமமான தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கழகத்தின் சார்பில் வாதாடிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எடுத்துரைத்துள்ளார்.
வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் அவர் நினைவூட்டி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள விரிவான விசாரணையின்போதும், அரசியல் சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து திமுக விரிவான வாதங்களை வைக்கும், அந்த அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்லும்.
சமூக நீதி என்பது நெடும் பயணம்; தொடர் ஓட்டம். வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், எல்லாத் தளங்களிலும் தங்கள் பங்கைப் பெற்று சமூக மக்களாட்சியை நிலைநிறுத்தும் வரையிலும் நமது பணியையும் போராட்டத்தையும் சமரசமின்றித் தொடர உறுதி ஏற்போம். இந்தியா சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து நடைபோட தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழும், திமுக அதற்கு என்றும் போராடும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago