சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 'ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்று நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டம் தான் நீதிமன்றங்களால் ஏற்கப்படும்' என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கிறார். முதல்வரின் இந்த உத்தரவாதம் வரவேற்கத்தக்கது. ஆனால், ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு முடிவு கட்டுவதற்கான தமிழக அரசின் அணுகுமுறை அரசும், மக்களும் எதிர்பார்க்கும் தீர்வை வழங்காது என்பதுதான் எதார்த்தம் ஆகும்.
சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இதுகுறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட இயலாது என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை ஆகும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் இயற்றியுள்ளன. அச்சட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உயர்நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வழிகளிலும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. சுமார் 7 வழக்குகளில் இத்தகைய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு எதிராகவும் இத்தகைய தீர்ப்பை சூதாட்ட நிறுவனங்கள் பெற்றுள்ளன.
» திருக்குறள் கதைகள் 97 -98: தீமை
» இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது: புதிதாக 1,17,100 பேருக்கு தொற்று
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதும் அதே தீர்ப்பைத் தான் உச்சநீதிமன்றம் வழங்கும். அதற்கான காரணங்களில் முதன்மையானது ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்த விளையாட்டுகள் என்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதுதான். தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்தே நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது நல்ல நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றாலும் கூட, ஆன்லைன் சூதாட்டங்கள் திறமை சார்ந்தவை அல்ல... அதிர்ஷ்டம் சார்ந்தவை என்று நிரூபிப்பதற்கான வலுவான அம்சங்கள் தமிழக அரசின் சட்டத்தில் இல்லை.
ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால், மறுபுறத்தில் ஆடுபவை மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது முதலில் ஒரு சில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள் அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும் போது, அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும். அதற்கேற்ற வகையில் தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்று நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அந்த சட்டம் தான் நீதிமன்றங்களால் ஏற்கப்படும். இதை சென்னை உயர் நீதிமன்றமும் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு, புதிய சட்டம் இயற்ற அறிவுறுத்தியது.
அதற்கு மாறாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதால் எந்த பயனும் விளையாது. தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழக அரசின் சட்ட அமைச்சரும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில், புதிய சட்டத்தை இயற்ற முதல்வர் ஆணையிட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால், அடுத்த சில வாரங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்வதாக அமைச்சர் அறிவித்தார். அதன்பின் 100 நாட்களுக்கு மேலாகியும் தமிழக அரசின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டதாகக் கூட தெரியவில்லை.
இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு மீது தீர்ப்பு வரும் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் மக்கள் பணத்தை இழக்கவும், தற்கொலை செய்து கொள்ளவும் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பிந்தைய 5 மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்ட அரக்கன் 2 குழந்தைகள் உட்பட 12 உயிர்களை பலி கொண்டிருக்கிறான்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் இனி ஒருவர் கூட பணத்தை இழக்கக்கூடாது; ஓர் உயிர் கூட பறி போகக்கூடாது; ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வந்து விடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலையாக இருக்க வேண்டும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; மார்ச் மாதம் மீண்டும் கூடும் பேரவையில் அதற்கான சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago