'பிரதமருக்கு நேர்ந்தது, இந்திய ஜனநாயகத்துக்கே மாபெரும் இழுக்கு' - புதுச்சேரி உள்துறை அமைச்சர்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: "பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு நேர்ந்தது, இந்திய ஜனநாயகத்துக்கு மாபெரும் இழுக்காகும்" என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பஞ்சாப் மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு வருகைபுரிந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அரசியல் நாகரிகம் இல்லாமல் தடுத்து நிறுத்தியதுடன் ஜனநாயகத்தை படுகொலை செய்து போராட்டக்காரர்களுடன் கைகோர்த்து பஞ்சாப் மாநில அரசும், போலீஸாரும் தாக்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு மாபெரும் இழுக்காகும்.

அரசியல் நாகரிகம் மறந்து பிரதமரின் காரை மறித்து அவருடைய பயணத்துக்கு போராட்டக்காரர்கள் என்ற பெயரில் புல்லுருவிகள் செய்திருக்கும் வக்கிரமான இந்த செயலை கண்டு நாடே வெட்கி தலைக்குனிகிறது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு இந்த அநாகரிக செயலுக்கு முழு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசின் செயலை புதுச்சேரி மாநில பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

பிரதமரை வரவேற்க கூட செல்லாத பஞ்சாப் முதல்வரின் பண்பாடற்ற இந்த ஒரு செயலே அவர் எப்படி பட்டவர் என்று நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கொள்கை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் அரசின் செயல்பாடு இருக்க வேண்டுமே தவிர, அதை வன்முறையால் வென்றிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பயணித்து கொண்டிருக்கிறது.

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஜனநாயகத்தை வென்றிடலாம் என்று காங்கிரஸ் போடும் தப்புக் கணக்கு மக்கள் மன்றத்தில் ஒருபோதும் எடுபடாது. நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலிலே பஞ்சாப் மாநில மக்கள் காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE