புதுச்சேரி: அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தர, ரூ.15 கோடியில் உருவான அட்சயபாத்திரா திட்ட சமையல் கூடம், கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டன. அடுத்தக் கல்வியாண்டு முதல்தான் அரசுப் பள்ளிகளுக்கு உணவு விநியோகம் தொடங்கப்படவுள்ளது. முட்டை அரசு தரப்பில் தனியாக தயாராகி தரப்படும்.
புதுவை அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மதிய உணவு தயாரித்து அளிக்கும் பணியை அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்திடம் அரசு கடந்த 2018 ஜூலையில் ஒப்படைத்தது. இதையடுத்து அந்த நிறுவனம் புதுவை லாஸ்பேட்டையில் மைய சமையல்கூடத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இதற்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஆதரவோடு நவீன சமையல்கூடம் அமைக்கப்பட்டது. சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, இந்த நவீன சமையல்கூட திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவுக்கு அட்சய பாத்திரம் நிறுவன துணைத்தலைவர் சஞ்சலபதி தாசா தலைமை வகித்தார். ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதிய சமையல்கூடத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாணவர்களோடு அமர்ந்து உணவருந்தினர். நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், கேஎஸ்பி.ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
புதிய சமையல்கூடத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு உணவு சமைக்க கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை சுத்தமாக கழுவி எந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. புதுவை பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு இங்கிருந்து உணவு வழங்கப்படும். இங்கிருந்து உணவை சூடாக பரிமாற 40 இன்ஸ்லேட்டர் வாகனங்கள் ஹைட்ராலிக் வசதிகளுடன் இயக்கப்பட உள்ளது. முதல் நாளான இன்று இனிப்பு பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, சாம்பார்சாதம், தயிர் சாதம், கொண்டைக்கடலை குருமா, உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவை மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. தொடர்ந்து சாதம், அந்தந்த பருவத்துக்கேற்ப காய்கறி பொறியல், சாம்பார், சுண்டல், தயிர் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
நவின சமையல் கூடத்தை திறந்து வைத்து ஆளுநர் தமிழிசை பேசுகையில், "அட்சய பாத்திரா நிறுவனம் மூலமாக 50,000 குழந்தைகளுக்கு உணவு அளிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். தூய்மையான உணவு சமைக்கப்படுகிறது இது குழந்தைகளுக்கு மிகுந்த ஊட்டச்சத்தினை அளிக்கும். குழந்தைகளுக்கு கரோனா காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு தேவை. ஊட்டச்சத்து உணவு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டார்.
அட்சய பாத்திரம் நிறுவன துணைத் தலைவர் சஞ்சலபதி தாசா கூறுகையில், "இது எங்கள் நிறுவனத்தின் 60-வது சமையல்கூடம். கட்டடங்களுக்கு மட்டும் ரூ.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்ற 150 பேர் தேவை. இதற்கு தகுதியுடைய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த சமையல்கூடம் முழுமையாக செயல்பட இன்னும் 2 மாதங்களாகும். 50 சதவீதம் அரசும், 50 சதவீதம் அட்சய பாத்திரம் நிறுவனமும் செலவு செய்கிறது. சராசரியாக நாளொன்றுக்கு ரூ.5 லட்சம் செலவாகும் என எதிர்பார்க்கிறோம். காரைக்காலிலும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
கல்வித்துறை தரப்பில் கூறுகையில், "முட்டை வழக்கம் போல் தரப்படும். அதை கல்வித்துறை தரும். அட்சயபாத்திரா திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை அரசு தரப்பில் மதிய உணவு தருவோம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago