ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 711 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 815 பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் முதல் அலை, இரண்டாம் அலை என கரோனா பரவல் அதிகரித்து, தற்போது மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. கரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், சிகிச்சை பெறுவோர் விவரம், உயிரிழந்தோர் விவரம் போன்றவை குறித்து அரசின் அறிவிப்புகளில் முரண்பாடுகள் வெளிப்பட்டன.
இந்நிலையில், தற்போது கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களில் முரண்பாடு தொடர்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;
சுகாதாரத்துறை நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 865 பேர் இதுவரை கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 419 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 711 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, கரோனாவால் இறந்தவர்களுக்கு அரசின் இழப்பீடு குறித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகை பெற ஈரோடு மாவட்டத்தில் 1725 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 815 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதர விண்ணப்பங்களில் 47 மனுக்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும், மருத்துவ ஆவணங்கள் இணைக்கப்படாமை, தொலைபேசி எண் இல்லாமை, வாரிசு மற்றும் சட்டப்பிரச்சினை காரணமாக மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 711 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 815 பேரின் குடும்பத்திற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிடும் கரோனா செய்திக்குறிப்பில் குறிப்பிடும் இறப்பிற்கும், உண்மையான இறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இதுவரை (3-ம் தேதி வரை) கரோனா தொற்றால் 36 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பெரும்பாலான உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு மற்றும் வாரிசுகளுக்கு இழப்பீடு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி கரோனா தொற்றால் இறந்தவர்கள் குறித்த விவரம் பதிவு செய்யப்பட்டு, அவை நாள்தோறும் அறிக்கைகளாக வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களும் இழப்பீடு பெற அரசு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதன்படி, இறந்தவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதற்கான சான்றிதழ், இறப்பின்போது மருத்துவமனை அளிக்கும் அறிக்கை, இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மைப் பிரிவில் விண்ணப்பித்தால் மருத்துவக் குழுவின் பரிசீலனைக்குப் பின்னர் இழப்பீடு பெற முடியும், என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 secs ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago