பணக்காரர்களை போல் வசதி யோடு பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் 699 ரேஷன் கடைகள் மூலம் 4 லட்சத்து 43 ஆயிரத்து 375 குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை வரவேற்றார்.
இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொங் கல் பரிசு தொகுப்பு மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் 232 பயனாளிகளுக்கு கடனுதவி களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் பேசும் போது, ‘‘இந்த அரங்கத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறீர்கள். முகக்கவசம் அணிந்தால் ஒமைக் ரானும் வராது டொமைக்ரானும் வராது’’ என்றார்.
வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் பேசும்போது, ‘‘ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டி கையின்போது அனைத்து பொருட் களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் வழங்கியுள்ளார். கடந்த ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளில் ரூ.1,000 பணம் கொடுத்தார்கள். அப்போது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கு திரும்ப வந்துவிடும் என்றார். அதனால் தான் நாங்கள் பணம் கொடுக்காமல் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறோம்’’ என்றார்.
பின்னர், அமைச்சர் துரை முருகன் பேசும்போது, ‘‘முதல மைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் தினசரி மகத்தான பணியை செய்து கொண் டிருக்கிறார். அவர், நிர்வாகத்தில் முழுமையாக ஈடுபடும் அளவுக்கு நாடு விட்டு வைக்கவில்லை. ஆட்சிக்கு வந்ததும் கரோனா பெருந்தொற்று வந்துவிட்டது. கரோனா தடுப்பு பணியில் முதல் 5 மாதங்கள் காலம் கடந்துவிட்டது. இன்னும் முடியவில்லை.
தற்போது, கரோனா தொற்று குழந்தைகளின் பக்கம் மாறி யுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி யுள்ளது. எந்தவித தயக்கமும் இல்லாமல் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும். எனக்கு கரோனா வந்தபோது ஊசி போட்டதால்தான் உயிர் பிழைத்தேன். இல்லாவிட்டால் நான் உங்கள் முன் நின்று இப்படி பேசியிருக்க முடியாது.
தமிழர் திருநாளில் ஏழை, எளிய மக்கள் பணக்காரர்களை போல் வசதியோடு பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் வழங் கியுள்ளார். இதன் மூலம் ஏழை, எளியவர்கள் வீட்டிலும் பொங்கல் வளமாக இருக்கும்’’ என்றார்.
திருப்பத்தூர்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித் தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண் ணாமலை நாடாளுமன்ற உறுப் பினர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 20 வகையான பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பை வழங்கினர்.
அப்போது, ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் கூட்டுறவு துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று (நேற்று) முதல்அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். திருப்பத்துார் மாவட்டத்தில், தகுதியான அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் குறை பாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04179-222111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் முனிராஜ், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ். ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago