சென்னை: "தமிழகத்தில் 1,551 புதிய பார்களை திறப்பது தமிழக அரசின் கொள்கை முடிவா அலல்து அமைச்சரின் தனி முடிவா?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்களை (பார்) நடத்தும் உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது தொடர்பான குற்றச்சாட்டுகளும், அவற்றுக்கு அரசு அளித்துள்ள விளக்கங்களும் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் குடிப்பகங்களின் எண்ணிக்கை ஓசையின்றி உயர்த்தப்பட்டுள்ளன. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
டாஸ்மாக் குடிப்பகங்களில் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுப்புட்டிகளை சேகரிப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த டிசம்பர் 14-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை பெறப்பட்டன. ஒப்பந்தப்புள்ளிகள் டிசம்பர் மாத இறுதியில் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
உரிமம் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதாகவும், பெயரளவில் ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த உரிமங்களையும் ஒரு தரப்புக்கு வழங்க மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் தீர்மானித்திருப்பதாகவும், இது குறித்த முடிவுகளை குறிப்பிட்ட சிலர் மட்டுமே தீர்மானிப்பதாகவும் குடிப்பகம் நடத்துவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்துள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களில் ஒருதரப்பினர் அமைச்சரின் வீட்டு முன் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
மது குடிப்பகம் நடத்துவதற்கான உரிமம் வழங்குவது தொடர்பான விஷயத்தில் எழுந்துள்ள புகார்களை அமைச்சர் மறுத்திருக்கும் போதிலும் கூட, இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதையும் கடந்து நமது கவலை என்பது தமிழ்நாட்டில் மது தாராளமயமாக்கப்பட்டுவிடக் கூடாது என்பது தான்.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7,000-கும் கூடுதலான மதுக்கடைகளும், 4,500-க்கும் அதிகமான குடிப்பகங்களும் இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களின் காரணமாக அவற்றின் எண்ணிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, முறையே 5,402 மதுக்கடைகள், 2,808 குடிப்பகங்களாக குறைந்தன. அவற்றிலும் இப்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 குடிப்பகங்களும் தான் செயல்பட்டு வருகின்றன. இயல்பாக அக்குடிப்பகங்களுக்கு மட்டும் தான் உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை டாஸ்மாக் கோரியிருக்க வேண்டும்.
ஆனால், அவற்றுடன் கூடுதலாக 1,551 குடிப்பகங்களுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கின்றன. மேற்கண்ட 1,551 குடிப்பகங்களும் ஏற்கெனவே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தவைதான் என்றும், அவற்றை இப்போது சட்டபூர்வமாக்கும் நோக்கத்துடன் அவற்றுக்கும் உரிமம் வழங்கப்படவுள்ளதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். அது மக்கள் நலன் சார்ந்த விளக்கமல்ல.... மாறாக வணிக நோக்கம் கொண்ட விளக்கம் ஆகும். அதை ஏற்கவே முடியாது.
அமைச்சர் கூறுவதைப் போல 1,551 குடிப்பகங்கள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்திருந்தால், அவற்றை நிரந்தரமாக மூடுவது தான் மக்கள் நல அரசுக்கு அழகும், அடையாளமும் ஆகும். மாறாக, அவற்றை சட்டபூர்வ குடிப்பகங்களாக மாற்றுவது மது வணிகத்தை தாராளமயமாக்கும் செயல்தான். மதுக்கடைகள் மற்றும் குடிப்பகங்களை நடத்துவது டாஸ்மாக் நிறுவனத்தின் பணி என்றாலும் கூட, தமிழ்நாட்டில் மதுவுக்கு நிலவும் கடுமையான எதிர்ப்பு காரணமாக, மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், மது விற்பனை நேரத்தையும் கூட்டுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும் அது கொள்கை முடிவாகவே எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் 1,551 புதிய குடிப்பகங்களை திறப்பது தமிழக அரசின் கொள்கை முடிவா? அல்லது அமைச்சரின் தனி முடிவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
மது குடிப்பகங்களை மது அருந்துவதற்கான இடமாக மட்டும் பார்க்க முடியாது. மது விற்பனையை தீர்மானிப்பதில் குடிப்பகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குடிப்பகங்கள் இல்லாத மதுக்கடைகளுடன் ஒப்பிடும் போது குடிப்பகங்களுடன் இணைக்கப்பட்ட மதுக்கடைகளில் அதிக அளவில் மது விற்பனை நடக்கிறது. மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரங்களிலும், நாள்களிலும் கூட குடிப்பகங்களில் மது விற்பனை நடக்கும். அதனால், குடிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மது வணிகத்தையும், அதனால் குடும்பங்கள் சீரழிவதையும், குற்றங்கள் பெருகுவதையும் அதிகரிக்கும். அது தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் கூட, மதுக்கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை குறைப்பதில் கணிசமான வெற்றியை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை தங்களின் கொள்கையாக ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பாமக வெற்றி பெற்றுள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகும் கூட, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதற்கு மாறாக குடிப்பகங்கள் அதிகரிக்கப்படுவது தவறு.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதை நோக்கி தான் அரசு பயணிக்க வேண்டும். அதற்கு முரணாக குடிப்பகங்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது. மாறாக, அனைத்து மது குடிப்பகங்களையும் மூடி, மதுவிலக்கை நோக்கிய பயணத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago