சென்னை மாநகராட்சியில் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க பொறியியல் மாணவர்களின் பங்களிப்பை பெற வேண்டும்: பேராசிரியர் ஏ.பி.அருள் மாணிக்கம் யோசனை

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்க பொறியியல் மாணவர்களின் பங்களிப்பைப் பெற வேண்டும் என்று பேராசிரியர் ஏ.பி.அருள் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 1978, 1984, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் பெய்த அதிகனமழையால் மாநகரமே தண்ணீரில் மிதந்தது. ஒவ்வொரு வெள்ளத்துக்கு பிறகும் ஆட்சிகள் மாறியும், ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தியும், கடந்த ஆண்டு நவம்பர்,டிசம்பரில் பெய்த அதி கனமழைகளால், வெள்ளநீர் தேங்கும் பகுதிகள் மேலும் அதிகரித்துள்ளன.

சென்னையில் தூய்மை இந்தியா இயக்கம் போன்ற திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை இப்போது பல கோடி ரூபாயில் செயல்படுத்தியும், அன்று போலவே இன்றும் சாலையோரம் குப்பைகள் கிடக்கின்றன. தூய்மை நகரங்கள் பட்டியலில் பங்கேற்ற 48 நகரங்களில் சென்னைக்கு 43-வது இடம்தான் கிடைத்தது. 2 ஆயிரம் கிமீ.க்குமேல் மழைநீர் வடிகால்களை கட்டியும் வெள்ளம் வடியவில்லை.

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும், இன்றும் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. தெருக்களில் மின்கசிவு உயிரிழப்புகள் தொடர்கின்றன. கொசு தொல்லை புகார் வந்தால் புகை மருந்து அடிப்பதைத் தவிர மாநகராட்சியிடம் இதுவரை வேறு புதுமைத் திட்டம் இல்லை. ஏற்கெனவே ‘சிங்காரச் சென்னை’ திட்டம் தொடங்கிய பின்னர் குறிப்பிடும்படியாக மாநகரில் மாற்றம் இல்லை. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்திய பிறகே, தியாகராயநகரில் வெள்ளநீர் சூழ்ந்தது. இப்போது மீண்டும் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.1300 கோடி மதிப்பீட்டில், பல்வேறு துறைகளுடன் இணைந்து திட்டங்களை மாநகராட்சி உருவாக்கியது. அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உருவாக்கப்பட்ட ‘அம்மா ரோந்து வாகனம்’ திட்டமும் ஒன்று. அதனால் குறிப்பிடும்படியாக பயனின்றி, அந்த வாகனங்கள் பெரும்பாலும் சாலையோரமே நிறுத்தப்பட்டுள்ளன.

இப்படி பயனில்லாத திட்டங்களை உருவாக்குவதற்கு பதிலாக, மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூலமாக, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய திட்ட அறிக்கைகளை பெற்று மாநகராட்சி செயல்படுத்த வேண்டும் என்று சிவில் பொறியியல் பேராசிரியர் (ஓய்வு) ஏ.பி.அருள்மாணிக்கம் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை'யிடம் கூறியதாவது: மாநகராட்சியின் பெரும்பாலான திட்டங்கள், மக்கள் பயன்பெறுவதற்கு பதிலாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் பயன்பெறும் திட்டங்களாகவே உள்ளன. மத்திய,மாநில அரசுகள் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத், சிங்கார சென்னை, நமக்கு நாமே உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கினாலும் அதைசெலவிடுவதற்கு ஆக்கப்பூர்வ திட்டங்கள் மாநகராட்சியிடம் இல்லை.

மணற்பாங்கான கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வெள்ளம் ஏற்படுவதே இல்லை. அங்கு மழைநீர் வடிகால் வேண்டாம் என்று மக்கள் போராடியதையும் மீறி, வெளிநாட்டில் கடன் வாங்கியாவது மழைநீர் வடிகால் கட்டியே தீருவோம் என மாநகராட்சி செயல்படுகிறது.

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 3-ல் ஒரு பங்கு கல்லூரிகள் சென்னை, புறநகரில் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பொறியாளர்களாக வெளிவருகின்றனர். அவர்கள் இறுதியாண்டுகளில் திட்ட அறிக்கைகள் தயாரிக்க வேண்டும். அங்குள்ள விரிவுரையாளர்களுக்கு கள மற்றும் செயல்முறை அறிவு இல்லாததால், மாணவர்களுக்கு பயனுள்ள, மக்கள் நலன் சார்ந்த திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு வழிநடத்த முடியவில்லை.

மாநகராட்சியும், இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் இணைந்து செயல்பட்டால், மாணவர்களுக்கும் திட்ட அறிக்கை தயாரிக்க கருப்பொருள் கிடைக்கும். மாநகராட்சிக்கும் மாநகர பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த திட்ட அறிக்கையும் கிடைக்கும். அதை செயல்படுத்த அரசிடம் நிதி வாங்குவதும் மாநகராட்சிக்கு எளிதாகும். மாநகராட்சியிடம் இல்லாத நவீன ஆய்வு உபகரணங்கள் கல்லூரிகளில் இருப்பதால், அவர்களின் திட்ட அறிக்கையில் துல்லியமும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, ‘‘இது நல்ல யோசனை, இதை அமல்படுத்த பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்