சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றி இனி எந்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வராமல் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் அதன் கொடுங்கரங்களால் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கமாக தனக்கு அடிமையானவர்களை மட்டும் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம், இந்த முறை 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தையே அழித்திருக்கிறது. இதற்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு அனுமதித்தால், அது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும்.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பன்னாட்டு வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் அவரது மனைவி மற்றும் இரு மகன்களை கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வெள்ளிக் கிழமை நடந்த இந்த சோகம் நேற்று தான் வெளியில் தெரியவந்திருக்கிறது. வங்கியில் நல்ல பதவியில் இருந்த மணிகண்டன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை இழந்து விட்டதாக தெரிகிறது. சேமித்து வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து விட்ட மணிகண்டன், ரூ.75 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாகவும், அதை திரும்ப செலுத்த முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது.
» புத்தாண்டின் முதல் நாளில் பட்டாசு ஆலை விபத்து: காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்: ஓபிஎஸ்
கடன் கொடுத்த சிலர் கடந்த டிசம்பர் 31ம் தேதி மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று கேட்டதாகவும், அப்போது தான் கணவனின் கடன் சுமை குறித்து அறிந்த மனைவி அதைத் தட்டிக் கேட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோதலின் உச்சத்தில் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு மணிகண்டனும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்ததால், தமிழ்நாடு மற்றும் புதுவையில் தற்கொலை செய்து கொண்ட ஏழாவது மனிதர் மணிகண்டன் ஆவார். இந்த 7 ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளும் ஆண்டுக்கணக்கில் நடந்து விடவில்லை. மாறாக, வெறும் 4 மாதங்களில் இந்த தற்கொலைகள் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து நிறைவேற்றப்பட்டிருந்த சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் ஆகஸ்ட் 20ம் தேதி விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட சோகம் மறையும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்தடுத்து மேலும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனது தான்.
ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு மனிதர்களை அடிமையாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது அதை விளையாடத் தொடங்குபவர்களுக்கு முதலில் வெற்றியும், பின்னர் தொடர் தோல்விகளும் கிடைக்கும் வகையில் சூதாட்டம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பலமுறை மிகவும் விரிவாக விளக்கியுள்ளேன். அவை இன்னும் மாறவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு தான் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துடன், அதைத் தட்டிக்கேட்ட மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றும்படி பா.ம.க பலமுறை வலியுறுத்தியதன் பயனாகத் தான், முந்தைய அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து முதலில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி அதை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதில் உள்ள குறைகளை களைந்து புதிய சட்டத்தை இயற்றும்படி ஆணையிட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நானும் இதை தொடர்ந்து வலியுறுத்தினேன். எனது அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். ஆனால், அதன்பின் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் இயற்றப்பட்டவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அந்த வழக்கு இன்னும் உச் சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படக்கூட இல்லை. உச்ச நீதிமன்றத்தில் அந்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டாலும் கூட, அதில் வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்குள் இன்னும் ஏராளமானவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்யும் வாய்ப்புள்ளது.
அதனால், உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்காமல், ஏற்கனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவது தான் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஆகும். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்றி, ஆன்லைன் சூதாட்டத்தால் இனி எந்த குடும்பமும் நடுத்தெருவுக்கு வராமல் அரசு காக்க வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago