போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத் திட்டம் - பொங்கல் பண்டிகைக்கு முன் அறிவிக்க முடிவு

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள், 25 சதவீத ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இக்கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, விரைவில் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 7 முதல் 10 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து கழக தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிதி நிலையை ஆலோசித்து வருகிறோம். இருப்பினும், இறுதிகட்ட முடிவை முதல்வர் எடுத்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறும்போது, ‘‘மின்வாரிய தொழிலாளர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வுஅளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளோம்.

எனவே, இந்த புதிய ஊதியஒப்பந்தம் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஏற்படுத்தி அறிவிக்க வேண்டுமென தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE