பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு வழங்கப்படும் செங்கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்: வி.கே.சசிகலா வலியுறுத்தல்

செங்கரும்பை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயிகளிடம் இருந்து பொங்கல் சிறப்பு தொகுப்பாக, செங்கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர், விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்கள் தலையிட்டு, கரும்புக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை பெற முடியாமல் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒரு கட்டு கரும்புக்கு ரூ.400 வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் போராடி வருகின்றனர். செங்கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE