சென்னை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் கணிசமானவை இன்னும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
பல மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நிலையில், அவற்றுக்கு மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து நேர்காணல் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார்,‘‘ நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் 157 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சில மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க நிலம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது தடைபட்டிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாத மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை அமைச்சர் பாரதி தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 58 கல்லூரிகள், இரண்டாம் கட்டமாக 24 கல்லூரிகள், மூன்றாம் கட்டமாக 75 கல்லூரிகள் என மொத்தம் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு அறிவித்தது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான செலவில், சாதாரண மாநிலங்களில் 60 விழுக்காட்டையும், வட கிழக்கு மாநிலங்களில் 90 விழுக்காட்டையும் மத்திய அரசு வழங்கும்.
இந்தத் திட்டத்தின்படி தான் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் பெறப்பட்டு, அவற்றை வரும் 12-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் முதல் இரு கட்டங்களில் தமிழகத்திற்கு புதிய கல்லூரிகள் ஒதுக்கப்படாத நிலையில், மூன்றாவது கட்டத்திலாவது குறைந்தது 15 மருத்துவக் கல்லூரிகளை பெற வேண்டுமென 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நான் தான் முதன்முதலில் வலியுறுத்தினேன். அதன்பிறகு தான் அப்போதைய அதிமுக அரசு 11 கல்லூரிகளைப் போராடி பெற்றது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 157 கல்லூரிகளில் 63 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் 11 கல்லூரிகள் உட்பட 39 மருத்துவக் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படவுள்ளன.
மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. அவற்றை அமைப்பதற்கான நிதியை பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு ஒதுக்கிய போதிலும், நிலம் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் அவை அமைக்கப்படவில்லை. புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் 2014 முதல் 2019 வரை அறிவிக்கப்பட்டவை. அதன்பின் 7 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க 16,000 மருத்துவக் கல்வி இடங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது தான் 157 புதிய மருத்துவக் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். புதிய கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் அவை தொடங்கப்பட வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும். அதன்படி 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளே நடப்புக் கல்வியாண்டில் திறக்கப்பட வேண்டும். ஆனால், 2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் பல 7 ஆண்டுகளாகியும் இன்னும் அமைக்கப்படாதது அவை அறிவிக்கப் பட்ட நோக்கத்தையே சிதைப்பதாகும். நிலம் இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடியாது என்பதால், இதுவரை அமைக்கப்படாத கல்லூரிகளை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்ற வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளோ இல்லாத மாவட்டங்களில் இந்தக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்திற்கான நிபந்தனைகளில் மிகவும் முக்கியமானதாகும். தேவைப்பட்டால் இதை தளர்த்திக் கொள்ளவும் முடியும். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை. இவற்றில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம். இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும். விருதுநகரில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago