தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளை வென்று, 2009, மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டபோதும் ராமேசுவரத்துக்கு அகதிகளின் வருகை நின்றபாடில்லை.
தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் 67 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும், 33,000-க்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாம்தான் மிகப் பெரியது. 1940-களில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளை ஜப்பான் ராணுவம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயர்களால் இந்த மண்டபம் அகதிகள் முகாம் கட்டப்பட்டது. பின்னர், இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடிவரும் தமிழர்களை தங்கவைக்கும் இடமாக மாறிவிட்டது.
மண்டபம் முகாமில் தற்போது 641 குடும்பங்களில் ஆண்கள் 792 பேர், பெண்கள் 837 பேர், ஆண் குழந்தைகள் 287 பேர், பெண் குழந்தைகள் 268 பேர் என மொத்தம் 2,184 பேர் வசித்து வருகின்றனர்.
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் நிறைவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 'உலக அகதிகள் தின'த்தையொட்டி (ஜூன் 20) மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் குறித்த பதிவைக் காண்போம்.
திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை…
மண்டபம் முகாமுக்கு வெளியே வசிக்கும் பாலமுருகன் கூறியது:
இலங்கையில் போர் நிறைவடைந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தொடக்கத்தில் சுமார் 5,000 பேர் மட்டுமே இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர். ராணுவத்தின் கெடுபிடி காரணமாக பெரும்பாலானோர் செல்லவில்லை.
தற்போது இலங்கையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. எனவே, யாருக்கும் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விருப்பம் இல்லை.
தமிழகத்தில் உள்ள அகதிகளில் பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு இல்லை. பட்டதாரி அகதிகள்கூட கூலித் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. எனவே, கல்வி மற்றும் வேலையில் இலங்கை அகதிகளுக்கு தமிழக முதல்வர் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
எம்எல்ஏ புகார்…
இதனிடையே, மண்டபம் அகதிகள் முகாமை அண்மையில் ஆய்வு செய்த ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியது:
இலங்கைத் தமிழருக்கு அரசின் மாத உதவித் தொகை சரியாக கிடைத்துவிடுகிறது. ஆனால், கழிவறைகள், குளியல் அறைகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் மண்டபம் முகாமில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், திறந்தவெளியைத்தான் முகாம்வாசிகள் பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக முகாமில் தங்கியிருந்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அல்லது வேறு முகாம்களுக்கு இடம் மாற வேண்டும் என்றாலோ இங்குள்ள மண்டபம் முகாம் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாலே போதும் என்ற நிலை ஏற்கெனவே இருந்தது. ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதற்காக முயலும் முகாம்வாசிகள் அலைக்கழிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அகதிகள் சமையல் செய்வதற்காக கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச காஸ் சிலிண்டர்கள் தற்போதைய ஆட்சியில் வழங்கப்படுவதில்லை. முகாம்வாசிகளுக்கு மீண்டும் இலவச காஸ் சிலிண்டர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை அகதிகளின் நிலை குறித்து பதிவு செய்வேன் என்றார்.
இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்…
'வாழும் கலை' அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியது:
3 மாதங்களுக்கு முன் மண்டபம் அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து, அவர்களின் தற்போதைய மனநிலையைப் பற்றி அறிந்தேன்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் அகதிகளாகவே வாழ முடியாது. எனவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago