தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார்: பிரதமர் மோடி ஜன.12-ல் மதுரை வருகை- பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்

ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பாஜக நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பாஜக சார்பில் ஜனவரி 12-ம் தேதி ‘மோடி பொங்கல்' விழா மதுரையில்நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா,மாநிலச் செயலாளர் உமாரதி, மகளிரணி மாநிலத் தலைவர் மீனாட்சி, எஸ்.சி. அணி மாநிலத் தலைவர் பொன்.பாலகணபதி,தேசிய பொதுக்குழு உறுப்பினர் நீலமுரளி யாதவ், மாவட்டத் தலைவர்கள் மகா சுசீந்திரன், டாக்டர் சரவணன், மேப்பல் சக்திவேல், பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டப் பார்வையாளர் நாகேந்திரன், மகளிரணி மாநிலச் செயலாளர் கவிதாகாந்த் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர 6 பேர் கொண்ட வரவேற்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம்தமிழகத்துக்கு கூடுதலாக 1,450இடங்கள் கிடைக்கவுள்ளன.

ஜனவரி 12-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் விழாவில் 11 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர்நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மதுரை பொங்கல் விழாவில் வேட்டி, சட்டை, துண்டு அணிந்துமோடி பங்கேற்க இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

மதுரை பொங்கல் விழாவில் பங்கேற்கும் மோடி, தமிழில் சில நிமிடங்கள் பேச இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி14-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபங்கேற்றார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியையும் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE