சென்னையில் திடீரென பெய்த அதீத கனமழையால் பல மணிநேரமாக போக்குவரத்து முடங்கியது. இதுபோன்ற பாதிப்புகளை சமாளிக்க தொலைநோக்குடன் கூடிய பேரிடர் கால திட்டங்களோடு, மெட்ரோ, ரயில்வே திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என்று போக்குவரத்து பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆண்டுதோறும் கனமழை பெய்வதும், ஏரிபோல மழைநீர் தேங்குவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர்கிறது.
சென்னையில் நேற்று முன்தினம் திடீரென பெய்த அதீத கனமழையால், மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பேருந்துக்காக காத்திருந்த மக்களும் சாலைகளிலேயே பல மணி நேரம் முடங்கினர். இரவு 10 மணிக்கு பிறகே வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கின. இதனால், மக்கள் வீடு திரும்ப நள்ளிரவானது. அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் வசதி இருந்ததால், பலரும் வீடு திரும்பினர்.நேற்று முன்தினம் மட்டும் 1.83லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் மழை பாதிப்பு வழக்கமாகி வரும் நிலையில், இனிவரும் பேரிடர் பாதிப்புகளை சமாளிக்க, சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் அதீத வானிலை மாற்றங்களை தவிர்க்க முடியாத சூழலில் இருக்கிறோம். இருப்பினும், அதற்கேற்ப ஆக்கப்பூர்வமான நீண்டகால திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, அதன் பாதிப்புகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர்கால திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். சாலைகளின் தன்மை என்ன, வழக்கமான நாட்களில் எவ்வளவு வாகனங்கள் செல்ல முடியும், கனமழை காலத்தில் எவ்வளவு வாகனங்களை இயக்க முடியும்என்பது போன்ற தகவல்களை அறிவது அவசியம்.
பேரிடர், இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து மக்களைவெளியே வராத வகையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இதற்கான நவீன தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்கள், கார்போன்ற தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, சென்னை மாநகரின் உள்பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டங்களையும், புறநகர் பகுதிகளில் கூடுதல் மின்சார ரயில்களின் சேவையையும், புதிதாக ‘லைட் மெட்ரோ ரயில்’ போன்றதிட்டங்களையும் செயல்படுத்தலாம். சென்னை - மாமல்லபுரம் தடத்திலும் மின்சார ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம். பேருந்துகள் மட்டுமே செல்லும் பிரத்யேக வழித்தடங்களை அமைத்தால், இக்கட்டான நேரத்திலும் நெரிசல் இன்றி விரைவாக செல்லலாம். தொலைநோக்கு பார்வையுடன் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற மேம்பாட்டு பொறியியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.பி.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் மக்கள்தொகை கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 75 சதவீதத்தினர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மக்கள்தொகை அதிகரிப்பதால் அடிப்படை வசதிக்கான தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது.
சென்னையில் அதிகரித்துவரும் வாகன எண்ணிக்கையை ஒப்பிடும்போது, சாலை பணிகளின் விரிவாக்கம் குறைவு. பல்வேறு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்.
மேலும், சென்னைபோல கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, தொழில், சுகாதார வசதி, கல்வி நிறுவனங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே சென்னையில் மக்கள் குவிவதை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் குவியும் மக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தாலே, பேரிடர் கால பாதிப்புகளில் இருந்து மக்களைஎளிதாக காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஆர்டிஎஸ் திட்டம் ஏன் சிறந்தது?
பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக பயணம் மேற்கொள்ளும் வகையில் ‘பிஆர்டிஎஸ் திட்டம்’ (Bus Rapid Transit System) செயல்படுத்தப்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு என பிரத்யேக சாலை அமைத்து, சாலைகளின் நடுப்பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் அமைத்து இயக்கப்படும். அகமதாபாத், இந்தூர் உள்ளிட்ட சில பெரிய நகரங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள்இன்னும் முழு வீச்சில் தொடங்கவில்லை.
ஒரு கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.150 கோடி வரையிலும், மெட்ரோ ரயில் லைட் பாதை அமைக்க ரூ.40 கோடி வரையிலும் செலவாகும். ஆனால், பிஆர்டிஎஸ் திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீ.க்கு ரூ.10 கோடி வரை மட்டுமே செலவாகும். இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடிய, குறைந்த செலவிலான பிஆர்டிஎஸ் திட்டத்தை அதிக அளவில் செயல்படுத்தலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago