என்ன சாதித்தது திமுக அரசு? ஒரு நாள் மழைக்கு மீண்டும் மிதக்கும் சென்னை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒரு நாள் மழைக்கு மீண்டும் சென்னை மிதக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு வடகிழக்குப்‌ பருவமழை தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு முன்‌னெச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்குத் தனியாகவும்‌, மாவட்ட அளவில்‌ ஆட்சித்‌ தலைவர்களுடனும்‌, காவல்‌ துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணித்துறை, சுகாதாரத்‌ துறை, உள்ளாட்சித்‌ துறை, நெடுஞ்சாலைத்‌ துறை, பொதுப்பணித்‌ துறை, மின்சார வாரியம்‌ உட்பட அனைத்து முக்கியமான துறைகளை பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறையின்‌ கீழ்‌ ஒருங்கிணைத்து, அப்போது முதல்வராக மக்கள்‌ பணியாற்றிய எனது தலைமையில்‌, மூத்த அமைச்சர்கள்‌ மற்றும்‌ துறை அமைச்சர்களுடன்‌ ஆகஸ்ட்‌ மாதத்திலேயே குறைந்தது 5 ஆய்வுக்‌ கூட்டங்களையாவது நடத்துவோம்‌.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்‌ தங்கள்‌ அதிகாரிகளுடன்‌ ஆலோசனைக்‌ கூட்டங்களை நடத்துவார்கள்‌. இது தவிர தலைமைச்‌ செயலாளர்‌ பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து அனைத்துத்‌ துறை அதிகாரிகளுடனும்‌ ஆய்வு செய்வார்‌. இந்த திமுக அரசு, மே மாதமே ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றும்‌, வடகிழக்குப்‌ பருவமழை குறித்த ஆய்வுக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்படவில்லை என்றும்‌, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சரியான அறிவுரைகள்‌ வழங்கப்படவில்லை என்றும்‌, முக்கியமாக சென்னையில்‌ பணிபுரிந்த அதிகாரிகளை முழுவதுமாகப் பணியிட மாறுதல்‌ செய்ததன்‌ விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக்‌ குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில்‌ குறிப்பிட்டிருந்தேன்‌.

நேற்று ஒரு நாள்‌, பிற்பகல்‌ முதல்‌ பெய்த கனமழையால்‌ சென்னையில்‌ மட்டும்‌ மின்சாரம்‌ தாக்கி 3 பேர்‌ பலியாகி உள்ளனர்‌. ஓட்டேரியில்‌ வசித்து வந்த திருமதி தமிழரசி (வயது - 70) நேற்று மாலை, நியூ பேரன்ட்ஸ்‌ சாலையில்‌ நடந்து சென்றபோது, அப்பகுதியில்‌ தேங்கியிருந்த மழை நீரில்‌ கால்‌ வைத்ததும்‌ மின்சாரம்‌ தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்‌. அதேபோல்‌, புளியந்தோப்பைச்‌ சேர்ந்த திருமதி மீனா (வயது - 40) சாலையில்‌ தேங்கிய மழை நீரில்‌ நடந்து சென்றபோது மின்சாரம்‌ தாக்கி உயிரிழந்துள்ளார்‌.

மேலும்‌, மயிலாப்பூரைச்‌ சேர்ந்த லட்சுமணன்‌ (வயது - 13) என்ற எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவன்‌ நேற்று மாலை வீட்டின்‌ அருகே தேங்கிய மழை நீரில்‌ கால்‌ வைத்ததும்‌ மின்சாரம்‌ தாக்கி உயிரிழந்துள்ளார்‌. மின்சார வாரியத்தின்‌ அலட்சியத்தால்‌ உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 20 லட்சம்‌ ரூபாய்‌ நிவாரண நிதியினை வழங்க வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌.

வடகிழக்குப்‌ பருவமழை 20 நாட்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின்‌ உபகரணங்கள்‌, சாலைகள்‌ மற்றும்‌ வடிகால்களைச் சீரமைத்திருந்தால்‌ இந்த பாதிப்புகளைத்‌ தவிர்த்திருக்கலாம்‌.

ஸ்டாலின்‌எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கைகளில்‌ கூறியிருக்கும்‌ யோசனைகளை, இந்த 8 மாதங்களில்‌ செயல்படுத்தி இருந்தால்‌ கூட, இந்த 3 உயிரிழப்புகளைத்‌ தவிர்த்திருக்கலாம்‌. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளையும்‌ தவிர்த்திருக்கலாம்‌. மின்வாரிய ஊழியர்களின்‌ அலட்சியத்தால்‌ அப்பகுதியில்‌ உள்ள மின்‌ வடங்களில்‌ இருந்து மின்‌ கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்குக்‌ காரணம்‌ எனப் பொதுமக்கள்‌ குற்றம்‌ சாட்டியுள்ளனர்‌. சட்டமன்ற எதிர்கட்சித்‌ தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச்‌ சொன்ன இன்றைய முதல்வர்‌, தற்போது இந்த அரசின்‌ மின்சாரத்‌ துறை அமைச்சரை ராஜினாமா செய்யச்‌ சொல்லுவாரா?

மேலும்‌, சென்னையில்‌ நேற்று ஒருநாள்‌ பெய்த கனமழையால்‌ சாலைகளில்‌ ஏற்கெனவே எங்கெல்லாம்‌ மழைநீர்‌ தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும்‌ தேங்கியது. சென்னையில்‌ பொதுமக்கள்‌ நேற்று வீடு திரும்ப, பெரும்‌ அவதிக்கு உள்ளானார்கள்‌ என்று அனைத்து ஊடகங்களும்‌, நாளிதழ்களும்‌ படத்துடன்‌ தலைப்புச்‌ செய்தியாக வெளியிட்டுள்ளன.

இந்த அரசின்‌ முதல்வர், பாதிக்கப்பட்ட இடங்களை, அதிகாரிகள்‌ அடங்கிய குழுவுடன்‌ பார்வையிடுகிறார்‌; ஊடகங்களுக்கு போஸ்‌ கொடுக்கிறார்‌; முந்தைய முதல்வர் ஜெயலலிதா அரசின்‌ மீது பழி போடுகிறார்‌; அதோடு அவரது பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அடுத்த நாள்‌ அவர்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த இடங்களை, நேரில்‌ சென்று பார்த்தால்‌ எந்தவித முன்னேற்றமும்‌ இல்லை என்று அப்பகுதி மக்கள்‌ கூறுகின்றனர்‌.

பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ உள்ள மக்கள்‌, பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் துறை அமைச்சர்கள்‌ யாருமே நேரில்‌ வந்து பார்வையிடவில்லை என்றும்‌, முதல்வர்‌ பார்வையிட்டுச்‌ சென்றவுடன்‌ நிவாரண உதவிகள்‌ வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விடுகிறது என்றும்‌, முக்கியமாக சென்னையில்‌ ஆளும்‌ கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்‌ வருவதேயில்லை என்று அனைத்து ஊடகங்களிலும்‌, சமூக வலைதளங்களிலும்‌ பேட்டி அளித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்‌.

தற்போதைய இந்த அரசு, நீட்டுக்காக ஒரு கமிட்டி; வெள்ள சேதங்களால்‌ பாதிப்படையாமல்‌ இருக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழு; நிதி மேலாண்மைக்கு ஒரு குழு என்று, குழுக்கள்‌ அமைப்பதைப்‌ பார்க்கும்போது, இந்த அரசு, தனது முன்னாள்‌ தலைவர்‌ எப்படி விசாரணை ஆணையங்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்பினாரோ, அதுபோல்‌ இந்த அரசும்‌ குழுக்களை அமைத்து பிரச்சினைகளை திசை திருப்புகிறதோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.

இனியாவது, தங்களது இயலாமையால்‌ மக்களுக்கு ஏற்படும்‌ இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக்‌ குறை கூறாமல்‌, மக்கள்‌ நலப்‌ பணிகளில்‌ உண்மையான அக்கறையுடன்‌ ஈடுபட வேண்டும்‌ என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்