தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளா?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் வகை தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உருமாறிய தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒமைக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவ வல்லுநர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 890 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,46,890. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,62,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE