சென்னை விமான நிலையத்தில் மர்ம பைகள்: வெடிகுண்டு பீதியால் பயணிகள் ஓட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 4 மர்ம பைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு பீதியால் பயணிகள் அங்குமிங்குமாக ஓடினர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் முதல் நுழைவாயில் வழியாக டெல்லி, மும்பை செல்லும் பயணிகள் உள்ளே சென்று கொண்டிருந்தனர். அப்போது நுழைவாயிலின் உள்ளே 4 மர்ம பைகள் கேட்பாரற்று கிடந்தது.

விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒலிபெருக்கியிலும் அந்த பைகள் தொடர்பாக அறிவிப்பு செய்தனர். இதன் பிறகும் பைகளுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வராததால், அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது.

இதனால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு பயத்தில் பயணிகள் அங்குமிங்குமாக ஓடினர். இதையடுத்து 1-ம் நுழைவாயில் மூடப்பட்டு, இரண்டாவது நுழைவாயில் வழியாக பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மர்ம பைகள் இருந்த இடத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள், மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு மர்ம பைகள் சோதனை செய்யப்பட்டது.

ஆனால் சோதனையில் அந்த பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஒரு பையை பிரித்து பார்த்தபோது அதில் புதிய பேன்ட், சட்டைகள் இருந்தன. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு வட இந்தியப் பெண், அந்தப் பைகள் தன்னுடையது என்று கூறினார்.

அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டியிருந்ததால் பைகளை வைத்துவிட்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். பையைக் கொடுக்க மறுத்த பாதுகாப்பு அதிகாரிகள், சோதனை முடிந்த பிறகு அதை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்த பிறகு அவரிடம் பைகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தால் காலை 7 முதல் 8.15 மணி வரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு சோதனை, போர்டிங் பாஸ் போன்ற பணிகள் தாமதமாக நடந்ததால் 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE