சென்னை: கரோனா பரவலைத் தடுக்க, சமுதாய, அரசியல் மற்றும் அரசு விழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் நடப்பதை முற்றிலும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"ஒமைக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், 27-12-2021 அன்று 605 ஆக இருந்த கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28-12-2021 அன்று 619 ஆகவும், 29-12-2021 அன்று 739 ஆகவும், 30-12-2021 அன்று 890 ஆகவும் உயர்ந்து கொண்டே செல்கின்ற நிலையில், திருச்சியில் மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், ஆங்காங்கே கூட்டங்கள் கூடுவது தடுக்கப்படுவதும் தான் முக்கியம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். இதனை நூறு விழுக்காடு உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த பத்து நாட்களில் மட்டும் இரண்டு அறிக்கைகள் வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், முதல்வரே போட்ட கட்டுப்பாட்டினை மீறியிருக்கிறார். இது மிகுந்த வேதனையளிக்கிறது.
கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை 31-12-2021 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக 13-12-2021 அன்று நாளிட்ட செய்தி வெளியீடு எண். 1336 தெரிவிக்கிறது. அந்தச் செய்தி வெளியீட்டில், பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன் கருதி சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பொருள் என்னவென்றால், அரசு விழா உட்பட பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்படுகிறது என்பதுதான். அதனால் தான் அந்தச் செய்தி வெளியீட்டிலே 'போன்ற' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதற்கு முற்றிலும் மாறாக 30-12-2021 அன்று நலத் திட்ட உதவிகள் என்ற பெயரில் தஞ்சாவூரிலும், திருச்சியிலும் பெருந்திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு அந்த விழாக்களிலே முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றியிருக்கிறார். திருச்சியிலே நடைபெற்ற கூட்டத்திலே பேசிய முதல்வர், "நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே உருவாக்கி இருக்கிறார். தம்பி மகேஷ் சொன்னார், மாநாட்டு மன்னர் என்று. நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அவருக்கு மாநாடு போன்ற கூட்டத்தை எழுப்புவது என்பது சர்வ சாதாரணம். டீக்கடையில் நின்று டீ குடிப்பது போன்று. அதனால்தான் நேரு என்றால், மாநாடு, மாநாடு என்றால் நேரு" என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து முதல்வர் உத்தரவை முதல்வரே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டை மீறுகிறார் என்றால் மக்கள் எப்படி மீறாமல் இருப்பார்கள். மக்கள் கடல் என்கிறபோது அங்கே முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை கடைபிடிக்கப்பட்டு இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. இதுபோன்ற மாநாடுகளை கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் நடத்துவது கரோனா நோய்த் தொற்றினை பரப்புவதற்கு சமம். இந்தத் தருணத்தில் இப்படிப்பட்ட மாநாட்டினை கூட்டியதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, கரோனா நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே இருப்பதையும், ஒமைக்ரான் வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதையும் கருத்தில் கொண்டு, சமுதாய, கலாச்சார, அரசியல், அரசு விழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் நடப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago