ஜிஎஸ்டி நிலுவை, திட்ட நிதி, உள்ளாட்சி மானியம் உட்பட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.40,803 கோடி விடுவிக்க வேண்டும்: டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை, இதரதிட்டங்களுக்கான நிலுவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்உள்ளிட்ட ரூ.40,803 கோடியை விரைவில் விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டை வரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் அதிகரிப்பு, மாநிலங்களுக்கு வளங்களை மாற்றுவதில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மூலமாக மத்திய அரசின் மொத்த வரிவருவாய் 2020-21ல் 19.9 சதவீதம்அளவுக்கு 3 மடங்காக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாநில அரசுகள் 20 சதவீதம் வரி வருவாயை இழந்துள்ளன.

எனவே, செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரியில் மத்திய அரசு இணைக்க வேண்டும். இதன்மூலம், மாநிலங்கள் தங்களின் சட்டப்பூர்வமான பங்கை பெற முடியும்.

ஜிஎஸ்டியை பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் உண்மையானவருவாய்க்கும், மத்திய அரசின் உத்தரவாதத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. பெருந்தொற்று காலத்தில் இருந்தேஇது அதிகரித்து வருகிறது. மாநில வருவாய் தற்போது வரை மீட்கப்படாத நிலையில், அதிகமான வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே, மத்திய அரசு இழப்பீடு அளிக்கும் கால அளவை 2022 ஜூன் மாதத்துக்கு பின்னரும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதுதவிர, தற்போது நிலுவையில் உள்ள ரூ.16.725 கோடி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான பங்களிப்பு நிதியில் ரூ.17 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிஉள்ளது. இதுதவிர, 14-வது நிதிஆணையம் பரிந்துரைத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியம் ரூ.2,029.22 கோடி மற்றும் அடிப்படை மானியம் ரூ.548.76கோடி நிலுவையில் உள்ளது. இந்ததொகைகளை மத்திய பட்ஜெட்டில் அறிவித்து வழங்க வேண்டும்.

2016-ம் ஆண்டு தணிக்கை அறிக்கையின்படி, தமிழக அரசுக்கு ரூ.4,500கோடி நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் 5 சதவீத அளவுக்கு எவ்விதநிபந்தனையும் இன்றி கடன் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பை, முன்பு இருந்ததுபோல 49 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். பழைய வாகன அழிப்பு கொள்கையை மறுசீரமைப்பு செய்யவேண்டும். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை விரைவில் விரிவாக்கம் செய்வதுடன், 17 மீட்டர் அளவுக்கு அகழ்வு செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் திட்டத்துக்கு 50 சதவீத மத்திய அரசின் பங்களிப்பு தொகையையும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விடுவித்து பணிகளை விரைவுபடுத்துவதுடன் கூடுதல் திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.

மதுரையில் தேசிய மருந்தாளுநர் கல்வி, ஆராய்ச்சி நிலையம் அமைக்க2009-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசு அதற்கான இடத்தையும் ஒதுக்கியுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கரோனா 2-ம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு சிறப்புகட்டமைப்பு உதவி திட்டத்தை உருவாக்கி அறிவிக்க வேண்டும்.

மத்திய சிறுதொழில் வங்கிக்கான கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி, பின்னலாடை தொழிலுக்கு உயர்த்தப்பட்ட 12 சதவீத ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பர்னிச்சர்பொருட்களுக்கான சுங்கவரியை நீக்க வேண்டும். இரும்பு, தாமிரம், அலுமினியம், பித்தளை, பருத்தி நூலுக்கான இறக்குமதி வரி விதிப்புமுறையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE