தமிழகத்தின் தொழில்வளர்ச்சி மிகப்பெரிய இலக்கை எட்ட உள்ளதாக திருச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சி தாயனூரிலுள்ள கேர் கல்லூரி வளாகத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் உட்பட ரூ.604 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.153.21 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்து, ரூ.327 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இரட்டையர்களாக செயல்பட்டு மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடமிருந்து 78,582 மனுக்களை பெற்றுள்ளனர். அவற்றை ஆய்வு செய்து 45,088 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அதிலுள்ள தகுதியான அனைத்து மனுக்களுக்கும் 3 நாட்களுக்குள் வீடு தேடிவந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தமிழகத்தில் எந்த தனி மனிதனும் அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்.
அரசிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேறும் என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதால், மக்களிடமிருந்து மீண்டும், மீண்டும் மனுக்கள் பெறக்கூடிய நிலை காணப்படுகிறது. இந்த சுழற்சி முறையை எப்போதும் நாங்கள் நிறுத்த மாட்டோம்.
எங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் நலன்காக்கும் ஆட்சியை வழங்கி வருகிறோம். தங்கியிருந்த இடத்திலிருந்து விழா மேடைக்கு வர சில நிமிடங்கள் போதும். ஆனால் 2.30 மணி நேரம் ஆகிவிட்டது. சாலையின் இருபுறமும் அதிகளவிலான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம். மனுநீதி சோழன் பற்றி கேட்டுள்ளோம். இப்போது மனுவாங்கும் சோழனாக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம்- மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி, மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு- உயர்ந்த வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என 7 உறுதிமொழிகளை அளித்தோம். அவற்றை நிறைவேற்றி வருகிறோம். கடந்த 6 மாதங்களில் ஏராளமான புதிய தொழிற்சாலைகளை உருவாக்க கையெழுத்தாகியுள்ளது. அதன்மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகப்பெரிய இலக்கை எட்ட உள்ளது.
கடும் நிதி நெருக்கடியை சமாளித்து சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம். கரோனா, மழை, வெள்ளம் என பல சோதனைகளை வென்று, மக்களுடன் நின்றோம். உங்கள் கோரிக்கையை எங்கள் தோளில் இறக்கி வையுங்கள். அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம். பிறக்கக்கூடிய 2022 புதிய ஆண்டு, கடந்த கால சுமைகள், சோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறப்பான ஆண்டாக அமையட்டும்.
நாட்டிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆண்டாக இருக்கட்டும். ஒரு கருத்துகணிப்பு நடத்தி நாட்டிலேயே சிறந்த முதல்வராக என்னை தேர்வு செய்தனர். அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மு.க.ஸ்டாலின் முதலிடம் என்பதைவிட, நாட்டிலேயே தமிழகம் முதலிடம் என்ற நிலையை அடைய வேண்டும். அதற்காக இந்த அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், செ.ஜோதிமணி, அப்துல்லா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பேரூராட்சிகளின் ஆணையர் ரா.செல்வராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், சீ.கதிரவன், பி.அப்துல் சமது, திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் அந்தநல்லூர் ச.துரைராஜ், மருங்காபுரி மூ.பழனியாண்டி, லால்குடி தி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வரவேற்றார். முடிவில் மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 secs ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago