சென்னையில் நாள் ஒன்றுக்கு 25,000 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் வகை தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உருமாறிய தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று (29.12.2021) நடைபெற்றது.

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

"கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பது கடந்த கால நிகழ்வுகளில் தெரியவருகிறது. எனவே தற்சமயம் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் 22,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை 25,000 ஆக அதிகரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்பொழுது, கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வகை தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுள்ள நபர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் வணிகப் பகுதிகளில் கோவிட் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்டி- பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் அனைத்து மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள் போன்ற பணி இடங்கள், மருத்துவக் கல்லூரிகள், அறிவியல் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்களின் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் பொதுமக்களுக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனடிப்படையில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்த நபர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கும் சுமார் 134 மருத்துவமனைகள் உள்ளன. இந்த 134 மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து செல்லும் நபர்கள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் குறித்த விவரங்களை அந்தந்த மருத்துவமனைகள் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு சிகிச்சை முடிந்து வெளியேறும் நபர்களின் தகவல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆர்டி- பிசிஆர் பரிசோதனை சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலர்களின் மூலமாக மேற்கொள்ளப்படவேண்டும்.

கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு முதற்கட்ட உடற் பரிசோதனை செய்யும் ஸ்க்ரீனிங் மையங்கள் (Screening Centers) ஏற்கெனவே 11 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தற்போது தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் 15 இடங்களில் முதற்கட்டப் பரிசோதனை மையங்களைச் செயல்படுத்தவும், தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற் பரிசோதனை மையங்களுக்கு அழைத்துச் செல்ல மாநகராட்சியின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 24 வாகனங்களைச் சரியான முறையில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல நல மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், மேற்குறிப்பிட்ட ஆர்டி- பிசிஆர் பரிசோதனைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்".

இவ்வாறு ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்