சென்னையில் கரோனா அதிகரிப்பு: சிகிச்சைக்கு 500 படுக்கைகள் தயார்

By செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 194 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்று அதிகரிப்பால் சென்னையில் அசோக் நகரில் உள்ள ஒரு தெரு உள்ளிட்ட 4 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் தொற்று பரவியுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

நேற்றைய நிலவரப்படி சென்னையில் 1,519 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை அளிக்க வசதியாக தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் 300 படுக்கைகள், சோழிங்கநல்லூர் மண்டலம் ஈஞ்சம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 படுக்கைகள், மாதவரம் மண்டலம் மஞ்சம்பாக்கத்தில் 100 படுக்கைகள் என மொத்தம் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்ட 800 படுக்கை வசதிகளும் சில தினங்களில் பயன்பாட்டுக்கு தயார்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று ஒரேநாளில் 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நாளொன்றுக்கு பரிசோதனை எண்ணிக்கையை 25 ஆயிரமாக உயர்த்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE